Published : 19 Mar 2022 01:52 PM
Last Updated : 19 Mar 2022 01:52 PM

தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23: நீடித்த நிலையான பருத்தி இயக்கத்துக்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு

சென்னை: தமிழகத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் பருத்தியின் உற்பத்தியை உயர்த்திட நீடித்த நிலையான பருத்தி இயக்கம், 15 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் மத்திய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என்று தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-23-ம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை மற்றும் உழவர்நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள்: > நீடித்த நிலையான வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம் சாகுபடியுடன், கறவை மாடு, ஆடுகள், நாட்டுக்கோழிகள், தீவனப்பயிர்கள், மரக்கன்றுகள், தேனீ வளர்ப்பு, மண் புழு உரத் தயாரிப்பு, ஊட்டச்சத்து தோட்டம் ஆகிய வேளாண் தொடர்பான பணிகளையும் சேர்த்து மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ஒரு தொகுப்பிற்கு 50 ஆயிரம் ரூபாய் மானியம் வீதம், 13 ஆயிரம் ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் 65 கோடியே 65 லட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

> நீடித்த நிலையான பருத்தி இயக்கம் புறநானூற்றில் "பன்னல்வேலி இப்பணை நல்ஊரே" என்று பருத்தியை வேலியாக உடைய ஊர்களைப் புலவர்கள் பாராட்டியுள்ளனர்.

> 2022-23 ஆம் ஆண்டில், தமிழகத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் பருத்தியின் உற்பத்தியை உயர்த்திட நீடித்த நிலையான பருத்தி இயக்கம், 15 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் மத்திய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் இயற்கை முறை பருத்தி சாகுபடியும் ஊக்குவிக்கப்படும்.

> சீர்மிகு நெல் சாகுபடித் திட்டம் 2022-23 ஆம் ஆண்டில் 19 லட்சம் எக்டரில் நெல் சாகுபடி மேற்கொண்டு, உயர் விளைச்சல் பெற, மத்திய, மாநிலத் திட்டங்கள் வாயிலாக சீர்மிகு நெல் சாகுபடித் திட்டம் மொத்தம் 32 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

> எண்ணெய்வித்துப் பயிர்களின் பரப்பு , உற்பத்தி பெருக்குத் திட்டம் சூரியனிருக்கும் திக்கில் முகம் திருப்பிப் புன்னகை புரியும் இயல்பு கொண்டது சூரியகாந்தி. சூரியகாந்திப் பயிரின் உற்பத்தித் திறனை அதிகரித்து தேசிய அளவில் முதல் மூன்று இடங்களில் தமிழகம் இடம்பெற வேண்டும் என்று முதல்வர் அறிவித்ததைச் செயல்படுத்திட சூரியகாந்திப் பயிரின் சாகுபடிப் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித் திறன் ஆகியவை உயர்த்தப்படும்.

> தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம், தென்காசி, கரூர், திண்டுக்கல், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கடலை, எள், சூரியகாந்தி, ஆமணக்கு ஆகிய எண்ணெய்வித்துப் பயிர்களில் உற்பத்தியினை அதிகரித்திட, 28 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x