Published : 18 Mar 2022 03:32 PM
Last Updated : 18 Mar 2022 03:32 PM

தமிழக பட்ஜெட் 2022-23: எஸ்சி, எஸ்டி மாணவர்களின் உயர்கல்வி உதவித் தொகைக்காக ரூ.1,963 கோடி ஒதுக்கீடு

தமிழக சட்டப்பேரவையில் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி உதவித் தொகைக்காக 1,963 கோடி ரூபாயும், உணவுக் கட்டணத்திற்கு 512 கோடி ரூபாயும் தமிழக பட்ஜெட் 2022-23-ல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள்: > ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரால் தொடங்கப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்திற்கு (TANSIM) 30 கோடி ரூபாய் நிதியாக வழங்கப்படும்.

அரசு மற்றும் அரசு நிறுவனங்களின் பகுக்கக்கூடிய கொள்முதல்களில், ஐந்து சதவீதம் தமிழகத்தைச் சார்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில் முனைவோர் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> விளிம்பு நிலையில் இருக்கும் இருளர்கள் போன்ற பண்டைய பழங்குடியினருக்கு (Particularly Vulnerable Tribal Groups)இந்த ஆண்டு 20.7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 443 வீடுகள் கட்டுவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. வரும் நிதியாண்டில் மேலும்,1000 புதிய வீடுகள் பண்டைய பழங்குடியினருக்கு 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும்.

>ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி உதவித்தொகைக்காக 1,963 கோடி ரூபாயும், உணவுக் கட்டணத்திற்கு 512 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இம்மதிப்பீடுகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு 4,281.76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> அனைத்து அரசு மாணவர் விடுதிகளின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்து, அதன் கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், கல்விச் சூழல், உணவுத் தரம், பாதுகாப்பு, கண்காணிப்பு ஆகியவற்றை மறுசீரமைக்கத் தேவையான பரிந்துரைகளை வழங்க, ஓர் உயர்மட்டக் குழு அமைக்கப்படும்.

> பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூக, பொருளாதார முன்னேற்றம் அடையும் வண்ணம், தற்போது நடைமுறையில் உள்ள வாழ்வாதாரத் திட்டங்களை ஆய்வு செய்து, மாறி வரும் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்றவாறு மறுசீரமைக்கப்படும்.

> பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி உதவித்தொகைக்காக 322 கோடி ரூபாயும், மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்குவதற்காக 162 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் வழிபாட்டுத் தலங்களான தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்காக்களைப் பழுதுபார்ப்பதற்காகவும், புனரமைப்பதற்காகவும் அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. இந்த ஆண்டு சென்னையில் உள்ள வெஸ்லி தேவாலயம், புனித தோமையர் மலை தேவாலயம், திருநெல்வேலியில் உள்ள கால்டுவெல் தேவாலயம், நாகர்கோவிலில் உள்ள தூய சேவியர் தேவாலயம், சென்னையில் உள்ள நவாப் வாலாஜா பள்ளிவாசல், ஏர்வாடி தர்கா, நாகூர் தர்கா ஆகிய தொன்மையான வழிபாட்டுத் தலங்கள்புனரமைக்கப்படும். இப்பணிகளுக்கு, வரும் நிதியாண்டில் 12 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

இம்மதிப்பீடுகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறைக்கு1,230.37 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x