Published : 16 Mar 2022 07:44 PM
Last Updated : 16 Mar 2022 07:44 PM

பூட்டியே கிடந்த மதுரை மேயர் இல்லம் 20 ஆண்டுகளுக்குப் பின் புதுப்பொலிவு: மேயர் இந்திராணி வசிக்க வருவாரா?

மதுரை: பூட்டியே கிடந்த மதுரை மேயர் இல்லம் 20 ஆண்டுகளுக்கு பொலிவுபெற்றுவரும் நிலையில், புதிய மாநகராட்சி மேயர் இந்திராணி அதில் வசிக்க வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சி மேயராக இருப்பவர்களுக்காக கட்டிய மேயர் இல்லம் கடந்த 20 ஆண்டாக யாருமே வசிக்காததால் பூட்டியே கிடக்கிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மேயர் இந்திராணியாவது இங்கு வருவாரா? அல்லது மற்றவர்களை போல் அவரும் வராமல் புறக்கணிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நகராட்சியாக இருந்த மதுரை கடந்த 1971ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மாநகராட்சியின் முதல் மேயராக எஸ்.முத்து இருந்தார். அவருக்கு பிறகு எஸ்.கே.பாலகிருஷ்ணன், எஸ்.பட்டுராஜன், குழந்தைவேலு, செ.ராமச்சந்திரன், தேன்மொழி கோபிநாதன், வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் இதுவரை மேயராக இருந்துள்ளனர். தற்போது புதிய மேயராக திமுகவை சேர்ந்த இந்திராணி பொறுப்பேற்றுள்ளார்.

மாநகராட்சி மேயராக இருப்பவர்கள், குடும்பத்துடன் வசிப்பதற்காக மதுரை நகரின் மையமான அண்ணாநகரில் 15 சென்ட் இடத்தில் மேயர் இல்லம் கட்டப்பட்டது. இந்த இல்லத்தில் கீழ்த் தளத்தில் வீட்டிற்குள் நுழைந்தவுடன் ஒரு அலுவலக அறை, ஒரு ஹால், இரண்டு தனி அறைகள், ஒரு டைனிங் ஹால், ஒரு சமையல் அறை ஆகியவை உள்ளது. மாடியில் ஒரு ஹால், ஒரு அறை உள்ளது. இதுதவிர இல்ல வளாகத்தில் ஒரு தோட்டம், பால்கனி, சிறிய பூங்கா அமைத்துள்ளனர்.

இந்த இல்லத்தில் கடைசியாக மேயர் குழந்தை வேலு குடும்பத்துடன் வசித்தார். இவர் பதவியில் இருந்த 5 ஆண்டுகளும் தங்கியிருந்தார். அதன்பிறகு மாநகராட்சி மேயராக வந்தவர்கள் யாரும் மேயர் இல்லத்தில் தங்கவில்லை. ஆனால், மாநகராட்சி நிர்வாகம் 20 ஆண்டாக பூட்டிக்கிடக்கும் மேயர் இல்லத்தை வெள்ளையடித்து பராமரிக்கும் பணியை அவ்வப்போது செய்து வருகிறது. மேயர் இல்லத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி, ஒரு மாநகராட்சி பணியாளர் ஒருவர் இல்லத்தை கண்காணித்து வருகிறார். தற்போது புதிய மேயராக இந்திராணி பொறுப்பேற்றநிலையில் மேயர் இல்லாம் பராமரிக்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது.

சேதமடைந்த சுவர்களையும், காம்பவுண்ட் சுவரையும் சீரமைக்கும் பணி, தரைத்தளம் பராமரிப்புப் பணி நடக்கிறது. பழுதடைந்த பிளம்பிங் பணிகள் நடக்கிறது. வெள்ளையடிக்கும் பணியில் 8 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பழைய எலக்ட்ரிக் வயர்களை அகற்றிவிட்டு புதிய வயர்களை அமைக்கும் பணியும் நடக்க இருக்கிறது. பழைய ட்யூப் லைட்டுகளை மாற்றிவிட்டு புதிய விளக்குகள் பொருத்தும் பணி நடக்கிறது. அதனால், புதிய மேயர் இந்திராணி, இந்த மேயர் இல்லத்திற்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வரவாய்ப்புள்ளது: இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ''மேயர் வசிப்பதற்காக அந்த இல்லத்தை சீரமைப்பு செய்து புதுப்பொலிவுப்படுத்தி அவரிடம் இல்ல சாவியை ஒப்படைப்போம். அங்கு வசிக்க வருவது அவரது விருப்பம். தற்போது கட்டும் வீடுகளை ஒப்பிடும்போது இந்த இல்லம் நவீன வசதிகள் ஒரளவு பழமையாகிவிட்டது. அதனால், மேயராக வருகிறவர்கள் அவர்களுக்கான வசதியில்லை என்று பெரும்பாலும் இங்கு தங்க வருவதில்லை. அதனால், மேயர் இல்லத்திற்கு செய்யும் பராமரிப்பு செலவுதான் வீணாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், தற்போது இல்லம் புதுப்பொலிவுப்படுத்துவதால் மேயர் வர வாய்ப்புள்ளது'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x