Published : 21 Apr 2016 10:03 AM
Last Updated : 21 Apr 2016 10:03 AM

பொலிவு இழந்து காணப்படும் ஊசிமலை காட்சிமுனை: கூடலூரை கவனிக்குமா சுற்றுலாத் துறை?

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் சுற்றுலாத் துறை, மற்றொரு சட்டப்பேரவைத் தொகுதியான கூடலூரைக் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

கூடலூரில் உள்ள பெரும் பாலான பகுதிகள் சட்டப் பிரச்சி னைக்குரிய நிலப்பகுதிகளாகும். பிரதான சுற்றுலாத் தலங்களாக முதுமலையும், ஊசி மலை காட்சிமுனையும் திகழ்கின்றன.

முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் வளர்ப்பு யானைகள் முகாம், யானை சவாரி, வாகன சவாரி என சுற்றுலாப் பயணிகளைக் கவரும் அம்சங்கள் இருப்பதால், எப்போதும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இதேபோல், கூடலூர் - உதகை சாலையில் அமைந்துள்ள மற்றொரு சுற்றுலாத் தலமான ஊசி மலை காட்சிமுனையில், பறவைகளைக் கண்டு ரசிக்கலாம். ஆனால், வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சுற்றுலாத் தலம், தற்போது பொலிவு இழந்து காணப்படுகிறது.

பாதுகாப்பின்மை

மேலும், சாலையில் இருந்து மலையின் உச்சியில் உள்ள காட்சி முனைக்குச் செல்லும் பாதை மிகவும் ஆபத்தானது. கவனமாகச் செல்லாவிட்டால், பள்ளத்தில் விழும் நிலை உள்ளது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி இருபுற மும் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள், தற்போது சேதமடைந்து உள்ளன. பல இடங்களில் தடுப்புகள் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையி லேயே சுற்றுலாப் பயணிகள் நடமாடுகின்றனர். சிலர், முகம் சுளிக்கும் வகையில் வாசகங்களை எழுதியும், படங்களை வரைந்தும் சென்றுள்ளனர்.

சேதமடைந்த காவலர் அறை

மேலும், நுழைவுவாயிலில் அமைந்துள்ள காவலர் அறையை பலமுறை யானைகள் சேதப்படுத்தி யுள்ளன. இங்கு யானைகள் நடமாட்டம் காரணமாக, மாலை 5 மணிக்கு மேல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. இப் பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், சுற்றுலாத் துறை கண்டுகொள்வது இல்லை எனப் புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக வனத்துறை யினர் கூறும்போது, ‘‘நிதி ஆதாரம் கிடைத்தவுடன் ஊசி மலையில் பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

இதுதொடர்பாக கூடலூரைச் சேர்ந்த சுற்றுலா ஆர்வலர்கள் கூறும் போது, ‘கூடலூரில் சுற்றுலாவுக்கு ஏற்ற பல இடங்கள் உள்ளன. வனம் மற்றும் சுற்றுலாத் துறை ஒருங் கிணைந்து, இங்குள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டறிந்து வாய்ப்பு ஏற்படுத்தினால், சுற்றுலாத் துறை வளரும்.

ஊசி மலைக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆனால், அப் பகுதியில் பாதுகாப்பு இல்லை. கூடலூரில் சுற்றுலா வாய்ப்புகள் இல்லாததால் சுதாரித்துக் கொண்ட கேரளா மாநிலம், பந்தலூர் அருகே அம்பலமூலா, வயநாடு ஆகிய பகுதிகளில் பூங்காக்கள், பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்கி, சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது’ என்றனர்.

படங்கள்: ஆர்.டி.சிவசங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x