Last Updated : 15 Mar, 2022 06:32 PM

 

Published : 15 Mar 2022 06:32 PM
Last Updated : 15 Mar 2022 06:32 PM

அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: அரசு ஊழியர்கள் பணி நேரங்களில் அலுவலகத்திற்குள் செல்போன் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த 4 வாரத்தில் வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி சுகாதாரத்துறை மண்டல அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் டி.எஸ்.ராதிகா. இவர் மீது பணியிடத்தில் செல்போனில் வீடியோ பதிவு செய்ததாகவும், அப்போது செல்போனை பறிமுதல் செய்த உயர் அதிகாரி மற்றும் காவலரை தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் ராதிகாவை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு சுகாதார போக்குவரத்து துறை இயக்குநர் பணியிடை நீக்கம் செய்து 29.1.2022-ல் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ராதிகா உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு: அரசு ஊழியர்கள் அலுவலக நேரங்களில் செல்போனை பயன்படுத்துவது இயல்பான ஒன்றாக மாறி வருகிறது. அலுவலக நேரங்களில் செல்போன் பயன்படுத்துவது, செல்போனில் வீடியோ பதிவு செய்வது நடத்தை மீறலாகும். அலுவலகத்தில் ஊழியர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக செல்போன் பயன்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது. அவசர காலத்தில் அதிகாரிகள் அனுமதியுடன் அலுவலகத்திற்கு வெளியே சென்று செல்போன் பேச அனுமதிக்கலாம்.

எனவே, அரசு அலுவலகங்களில் அலுவலக நேரங்களில் செல்போன், செல்போன் கேமராக்களை பயன்படுத்துவதை ஒழுங்குமுறைப்படுத்துவது தொடர்பாக அனைத்து அதிகாரிகளுக்கும் சுகாதாரத்துறை செயலர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் மற்றும் தமிழக சுகாதார போக்குவரத்து இயக்குனர் ஆகியோர் உத்தரவு மற்றும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

அந்த உத்தரவு மற்றும் சுற்றறிக்கையை மீறும் அரசு ஊழியர்கள் மீது அரசு ஊழியர்கள் நடத்தை விதி 1973-ல் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் பணி நேரத்தில் செல்போன் மற்றும் செல்போன் கேமராக்களை பயன்படுத்துவதை வரைமுறைப்படுத்த வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும்.

அதில் கள அலுவலர்கள், குறிப்பிட்ட பணிக்காக ஒதுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு விதி விலக்கு அளிக்கலாம். இந்த உத்தரவை 4 வாரத்தில் நிறைவேற்ற வேண்டும். உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக ஏப். 13-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x