Published : 15 Mar 2022 12:43 PM
Last Updated : 15 Mar 2022 12:43 PM

'இது திமுகவின் பழிவாங்கும் நடவடிக்கை' - எஸ்.பி.வேலுமணி வீட்டில் மீண்டும் சோதனை நடப்பதற்கு ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம் 

சென்னை: "அதிமுக முன்னாள் அமைச்சரான எஸ்.பி. வேலுமணி, சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் உள்ளிட்டோரைக் குறிவைத்தும் திமுக அரசு, மீண்டும் பழிவாங்கும் நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டிருக்கிறது. இந்த முறையற்ற அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கின்றோம்" என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்படாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "மக்களுக்கு தொண்டாற்றுவதிலும், அரசியல் பணிகளிலும், அதிமுக அர்ப்பணிப்புக்கும், உழைப்புக்கும் முன் நிறக இயலாத திமுக அரசு, தனது தோல்விகளை மறைக்க, அதிமுக அமைச்சர்கள் மீது மீண்டும் மீண்டும் பழிவாங்கும் நடவடிக்கைகளை ஏவிவிட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், அதிமுக அமைப்புச் செயலாளரும் கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ மீது பொய் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி, மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தோடு வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை என்ற பெயரில் களங்கத்தை அள்ளி வீசும் கண்ணியக் குறைவான நடவடிக்கையில் இறங்கிய திமுக அரசு, மீண்டும் வேலுமணியை குறிவைத்தும், சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் உள்ளிட்டோரைக் குறிவைத்தும் பழிவாங்கும் நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டிருக்கிறது. இந்த முறையற்ற அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கின்றோம். திமுக அரசின் உள்நோக்கத்தை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள என்பதை ஆட்சியாளர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் வேலுமணி துடிப்புடன் கட்சிப் பணிகள் ஆற்றியதை பொறுத்துக் கொள்ள இயலாமல் தற்போது அவர்மீது குறிவைத்து தாக்கப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல்களில் திமுகவினரின் ஆள்தூக்கி நடவடிக்கைகளையும், முறைகேடுகளையும், வீரத்துடன் எதிர்த்துப் போராடிய வேலுமணியை முடக்கிப் போடவே அவர் மீதும், அவர் தொடர்புடைய இடங்களிலும் இன்று லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனைகள் நடத்தப்படுகின்றது என்பதை அரசியல் தெரிந்த அனைவரும் நன்கு அறிவார்கள்.

வேலுமணி ஆயிரம் சோதனைகள் வந்தபோதும், அதனை எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்டவர். அதிமுக உறுதிமிக்க தொண்டரான வேலுமணி திமுக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளால் சிறிதும் தொய்வடைந்துவிடமாட்டார். அவருடைய கட்சிப் பணிகளும், மக்கள் தொண்டும் தொய்வில்லாமல் தொடரும் என்பதை கட்சித் தொண்டர்களும், கோவை மாவட்ட மக்களும் நன்கு அறிவார்கள்.

திமுக அரசின் தீய முயற்சிகள் அனைத்தையும் முறியடித்து அதிமுக சோதனைகள் அனைத்தையும் வென்று, தமிழக மக்களின் நம்பிக்க நட்சத்திரமாக விளங்குகிறது. இனியும் விளங்கும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x