Published : 11 Mar 2022 06:13 AM
Last Updated : 11 Mar 2022 06:13 AM

தாம்பரம் மாநகராட்சியில் 5 மண்டல குழு தலைவர் பதவியை கைப்பற்ற அமைச்சர், எம்எல்ஏக்கள் இடையே கடும் போட்டி

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் மேயர்,துணை மேயர் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகள் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மண்டலம்-1 (பம்மல்) வார்டு 1 முதல் 8 வரை, 10 முதல் 12 வரை, மற்றும் 29 முதல் 31 வரை. மண்டலம்-2 (பல்லாவரம்) வார்டு 9, 13, 21 முதல் 24 வரை மற்றும் 26 முதல் 28 வரை.மண்டலம் - 3 (சிட்லபாக்கம்) வார்டு 22, 23, 25 மற்றும் 34 முதல் 44 வரை.மண்டலம் -4 (தாம்பரம்) வார்டு 32, 33, 49 முதல் 61 வரை. மண்டலம் - 5(செம்பாக்கம்) வார்டு 45 முதல் 48 வரையும் மற்றும் 62 முதல் 70 வரை.

மேயர், துணை மேயர் பதவியேற்றுக் கொண்ட நிலையில், தற்போது மாநகராட்சியில் 5 மண்டல குழுத் தலைவர் பதவியைக் கைப்பற்ற திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஏற்கெனவே துணை மேயருக்கு அழுத்தம் கொடுத்துக் கிடைக்காததால், மண்டல குழுத்தலைவர் பதவி கேட்டு காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சியினர் கூடுதல் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அதேபோல், திமுகவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆதரவாளர்கள், எம்எல்ஏகள் எஸ்.ஆர். ராஜா(தாம்பரம்), இ.கருணாநிதி (பல்லாவரம்) ஆதரவாளர்களும் உறவினர்களும் மண்டல குழுத் தலைவர் பதவியைக் கைப்பற்றத் தீவிரம் காட்டுகின்றனர்.

இதில் பம்மல் மண்டலத்துக்கு வே.கருணாநிதி, பல்லாவரம் மண்டலத்துக்கு எம்எல்ஏ இ.கருணாநிதியின் சகோதரர் ஜோசப் அண்ணாதுரை, சிட்லபாக்கம் மண்டலத்துக்குக் காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஆர்.எஸ்.செந்தில் குமார், திமுக மகாலட்சுமி ஆகியோர் மோதுகின்றனர். தாம்பரம் மண்டலத்துக்குத் தாம்பரம்எம்எல்ஏ ராஜாவின் மைத்துனர் காமராஜ், செம்பாக்கம் மண்டலத்துக்கு மாடம்பாக்கம் நடராஜன், இந்திரன், கொடி தாமோதரன் போட்டியில் உள்ளனர்.

இந்தப் போட்டியில் அமைச்சர், எம்எல்ஏக்களில் யாருடைய கை ஓங்கும் என உற்றுநோக்கப்படுகிறது. 5 மண்டலங்களிலும் நிலவும் பொதுமக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கதிறமையும், அனுபவமும் உள்ளவர்களுக்கு இந்த மண்டல குழுத் தலைவர் பதவி வழங்க வேண்டும். வசதி படைத்தவர்களுக்கும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கும் இந்த பதவி வழங்கப்படக் கூடாது. மக்கள் மத்தியில் அதிக நெருக்கத்துடன் மக்களின் பேச்சைக் காது கொடுத்துக் கேட்கும் நபர்களுக்கு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து திமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: மண்டல குழுத் தலைவர் பதவிக்கு போட்டி இருந்தாலும் 5 பேர் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். அதன்படி த.சித்ரா இவருக்கு மேயர் பதவிகிடைக்க வாய்ப்பு இருந்தது.

தற்போது கிடைக்காததால் மண்டலம் 1 குழுத் தலைவராக சித்ராவும், மண்டலம் 2 - ஜோசப் அண்ணாதுரை, மண்டலம் 3 - மகாலட்சுமி, மண்டலம் 4 - ஜி.காமராஜ், மண்டலம் - 5 மாடம்பாக்கம் நடராஜன் ஆகியோர் மண்டல குழுக் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்த பின் இவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x