Published : 09 Mar 2022 06:47 PM
Last Updated : 09 Mar 2022 06:47 PM

மதுரை சித்திரைத் திருவிழா | தமுக்கம் மைதானத்துக்கு பதிலாக மாட்டுத் தாவணி அருகே 10 ஏக்கர் இடத்தில் தயாராகிறது பொருட்காட்சி

மதுரை: மதுரையில் பாரம்பரியமாக இதுவரை தமுக்கம் மைதானத்தில் நடந்து வந்த சித்திரை திருவிழா பொருட்காட்சி நடப்பாண்டு இடம் மாறுகிறது. மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள மாநகராட்சி சொந்தமான 10 ஏக்கர் இடம் தயார் செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

திருவிழாக்கள் நகரான மதுரை சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 16-ம் தேதி கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தமிழகம் மட்டுமில்லாது, உலக நாடுகளில் இருந்தும் இந்த விழாவில் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரள்வார்கள். அந்த நாட்களில் மதுரையே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் அரசு சார்பில் மாநகராட்சிக்கு சொந்தமான தமுக்கம் மைதானத்தில் பாரம்பரியமாக அரசு பொருட்காட்சி நடக்கும்.

இந்த தமுக்கம் மைதானம், மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் குறிப்பிட்ட வாடகை நிர்ணயித்து சித்திரைப் பொருட்காட்சி நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு வாடகைக்கு விடும். ஒரு நாள் வாடகையாக அரங்கு அமைப்பதைப் பொறுத்து ரூ.30 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டு வந்தது. திருவிழாவுக்கு வரும் லட்சக்கணக்கான மக்கள், இந்த பொருட்காட்சியை கண்டுகளிப்பார்கள்.

இந்நிலையில், தமுக்கம் மைதானத்தில் மாநகராட்சி சார்பில் சென்னை வர்த்தக மையம் (Trade Center) போல், தமுக்கம் மைதானத்தில் ரூ.45.55 கோடியில் வர்த்தக மையம் (convention center) அமைக்கும் பணி நடக்கிறது. அதனால், தமுக்கம் மைதானத்திற்கு பதிலாக மாட்டுத்தாவணி அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 10 ஏக்கர் காலி இடத்தில் இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா பொருட்காட்சி நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. அதற்காக, அந்த இடத்தை சீரமைக்கும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், சித்திரைத் திருவிழா நடக்கும் இடத்திற்கும் மாட்டுத்தாவணிக்கும் சம்பந்தமில்லாததால் பொருட்காட்சி கடந்த காலங்களைப் போல் எந்தளவுக்கு சிறப்பாக இருக்கும் எனக்கூற முடியாது என்று கூறப்படுகிறது. சித்திரைத் திருவிழா பொருட்காட்சியில் சித்திரை விழாவின் பாரம்பரியம், வரலாறு அடங்கிய தொகுப்புப் படங்கள், தமிழக அரசின் சாதனைவிளக்க புகைப்படங்கள், நிகழ்ச்சிகள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x