Last Updated : 22 Jun, 2014 12:27 PM

 

Published : 22 Jun 2014 12:27 PM
Last Updated : 22 Jun 2014 12:27 PM

மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி மறுப்பது நியாயமற்றது: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் குற்றச்சாட்டு

அனைத்து வசதிகளும் உள்ள திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு எம்சிஐ அனுமதி மறுப்பது நியாயமற்றது என்றார் இக்கல்லூரியின் முதல்வர் ஆர்.சின்னப்பன்.

திமுக தலைவர் கருணாநிதி 2006-ல் முதல்வராக பதவி யேற்றபோது, அவரது சொந்த ஊரான திருவாரூரின் வளர்ச்சிக்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை என்ற பேச்சு இருந்து வந்தது. இதையடுத்து அவருடைய முயற்சியால் திருவாரூரில் 2009-ல் மத்திய பல்கலைக் கழகமும், 2010-ல் அரசு மருத்துவக் கல்லூரியும் தொடங்கப்பட்டன.

தற்போது 4 ஆண்டுகளை கடந்துள்ள இந்தக் கல்லூரியில், ஆண்டுக்கு 100 மாணவர்கள் வீதம் 400 மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்து படித்து வரு கின்றனர்.

மாணவர்களின் மருத்துவப் பயிற்சிக்காக அருகிலேயே மருத்துவமனையும் தொடங்கப் பட்டது.

இந்நிலையில் இந்த மருத்துவக் கல்லூரியில் போதிய பேராசிரியர்கள், பரிசோதனை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை எனக் கூறி இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ) நிகழாண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுத்துள் ளதாகக் கூறப்படுகிறது.

கல்லூரி முதல்வர் நம்பிக்கை…

இதுகுறித்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்.சின்னப்பனிடம் கேட்டபோது, “கல்லூரியில் தற்போது 114 கல்வி யாளர் பணியிடங்கள் உள்ளன. ஆனால், எம்சிஐ 122 பணியிடங்கள் வேண்டும் என்று தவறாக மதிப்பிட்டுள்ளது. வழக்கமாக -10 புள்ளிகளுக்கு மேல் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்குத்தான் அனுமதி மறுக்கப்படும். ஆனால், திருவாரூர் அரசுக் கல்லூரிக்கு -6.4 புள்ளிகளே உள்ளன. ஆனால், எம்சிஐ குழு 14.6 புள்ளிகள் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

பேராசிரியர்கள், மாணவர்கள், பரிசோதனைக் கூடங்கள், கட்டிடங்கள், உள்கட்டமைப்பு, நோயாளிகள் எண்ணிக்கை என அனைத்திலும் இக்கல்லூரி தன்னிறைவுடனே உள்ளது. எம்சிஐ குழுவினரின் மதிப்பீடு தவறானது, நியாயமற்றது. இங்கு ஆய்வு செய்த எம்சிஐ குழு, அதன் பொதுக்குழுவில் இந்த அறிக்கையை முன்வைக் கவில்லை. எங்களுக்கும் இதுவரை தெரிவிக்கவில்லை. ‘தி இந்து’ மூலம்தான் நானும் தெரிந்துகொண்டேன். எம்சிஐ தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்து அறிவித்துள்ளது. இதைச் சுட்டிக்காட்டி விரைவில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை பெற்றுவிடுவோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x