Published : 06 Mar 2022 09:40 AM
Last Updated : 06 Mar 2022 09:40 AM

சேலம் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலையில் யுவராஜ் உட்பட 10 பேர் குற்றவாளிகள்: மார்ச் 8-ல் மதுரை நீதிமன்றம் தண்டனை அறிவிப்பு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட குற்றவாளிகள். படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை

சேலம் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 10 பேர் குற்றவாளிகள் என மதுரை நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கில் 5 பேரை விடுதலை செய்த நீதிபதி, 10 பேருக்கான தண்டனை விவரங்கள் மார்ச் 8-ம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ். இவர் 2015-ல் நாமக்கல் மாவட்டம் தொட்டிப்பாளையத்தில் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததால் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக சேலம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ்(35), அருண்(22), குமார் என்கிற சிவக்குமார்(36), சங்கர்(24), அருள்செந்தில்(35), செல்வகுமார்(43), தங்கதுரை(31), சதீஷ்குமார்(26), ரகு என்கிற தர்(21), ரஞ்சித்(22), செல்வராஜ்(32), சந்திரசேகரன்(44), பிரபு(34), கிரிதர்(23), சுரேஷ்(37), அமுதரசு(42) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் அமுதரசு தலைமறைவானார்.

இந்த வழக்கு முதலில் நாமக்கல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. பின்னர் கோகுல்ராஜ் தாயார் சித்ரா, விசாரணையை வேறு மாவட்டத்துக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த உயர் நீதிமன்றம், கோகுல்ராஜ் கொலை வழக்கை மதுரை வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது.

மதுரையில் 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. யுவராஜ் உட்பட 15 பேரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் யுவராஜ், அவரது சகோதரர்கள் அருண், குமார் மற்றும் சதீஷ்குமார், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் உட்பட 10 பேர் குற்றவாளிகள் என்றும், சங்கர், அருள் செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சுரேஷ் ஆகியோர் விடுதலை செய்யப்படுவதாகவும் நீதிபதி சம்பத்குமார் அறிவித்தார்.

யுவராஜ் உட்பட 10 பேருக்கான தண்டனை விவரம் மார்ச் 8-ல் அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஜோதிமணி என்ற பெண் உயிரிழந்துவிட்டார். தலைமறைவான அமுதரசு என்பவர் மீதான வழக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜராக உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மோகன் கூறும்போது, அரசு தரப்பில் 106 சாட்சிகள், நீதிமன்றம் தரப்பில் 2 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டன. சிசிடிவி உட்பட 100-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. தண்டனை விவரம் அறிவித்த பிறகே விடுதலை செய்யப்பட்ட 5 பேருக்கு தண்டனை அளிக்கக் கோரி முறையீடு செய்வதா?, இல்லையா? என்பது முடிவு செய்யப்படும் என்றார்.

தீர்ப்புக்கு வரவேற்பு

கோகுல்ராஜின் தாயார் சித்ரா கூறும்போது, 10 பேர் குற்றவாளிகளாக அறிவித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. 10 பேருக்கும் தூக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.

இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள விசிக தலைவர் திருமாவளவன், இதுபோன்ற கொலைகளைத் தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்றார். மக்கள் நீதி மய்யம் கட்சியும் தீர்ப்பை வரவேற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x