Published : 27 Jun 2014 11:46 AM
Last Updated : 27 Jun 2014 11:46 AM

அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கினால் போராட்டம்: ராமதாஸ் எச்சரிக்கை

அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கினால் பாமக போராட்டத்தில் ஈடுபடும் என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "சென்னையில் நேற்று நடந்த அரசு நிகழ்ச்சியில் 463 புதிய பேருந்துகளை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்திருக்கிறார். ஒருபுறம் அரசுப் போக்குவரத்துக் கழகங்களிடம் உள்ள 40 விழுக்காடு வழித்தடங்களை தனியாருக்கு தாரை வார்க்க அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இன்னொருபுறம் இப்படிப்பட்ட பகட்டான விழாக்களை நடத்துவதைப் பார்க்கும் போது பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டிவிட்ட பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த பின்னர் 70 விழுக்காடு வரை பேருந்து கட்டணங்களை உயர்த்தி அதில் பயணிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வயிற்றில் அடித்த அ.தி.மு.க. அரசு, நலிவடைந்த நிலையில் உள்ள போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த ஆக்கபூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், இதுவரை புதிய ஊதிய ஒப்பந்தப் பேச்சை அரசு தொடங்கவில்லை. அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வை இன்னும் அறிவிக்காதது மட்டுமின்றி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவைத் தொகையையும் இன்னும் வழங்காமல் தமிழக அரசு இழுத்தடித்து வருகிறது. ஓய்வூதியப் பயன்கள் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் அரசு முடக்கி வைத்திருக்கிறது. இதுதொடர்பாக இருமுறை நான் அறிக்கை வெளியிட்டும் அது இன்னும் ஆட்சியாளர்களின் செவிகளை எட்டவில்லை.

அதேநேரத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக காரணம் காட்டி, 40% வழித்தடங்களை தனியார்மயமாக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதாவது,தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இயக்கப்படும் 19,507 வழித்தடங்களில் சுமார் 7800 வழித்தடங்கள் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட உள்ளன.

இவ்வளவு வழித்தடங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டால், அரசுப் பேருந்துகளைவிட தனியார் பேருந்துகளின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும். அத்தகைய சூழலில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை தனியார் பேருந்துகள் வாங்குவதை உறுதி செய்யமுடியாது. அப்பேருந்துகள் தங்களது விருப்பம் போல கட்டணம் வசூலிக்கத் தொடங்கினால் ஏழைகள் பேருந்துகளில் பயணம் செய்வதே எட்டாக்கனியாகி விடும்.

அதற்கெல்லாம் மேலாக அரசுப் போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்க வேண்டிய தேவையே இல்லை. அரசு போக்குவரத்துக் கழகங்கள் மக்களுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்டனவே தவிர லாபம் ஈட்டுவதற்காக தொடங்கப்படவில்லை. எனவே, போக்குவரத்துக்கழகங்கள் சிறப்பாக சேவை செய்கின்றனவா என்பதைத் தான் பார்க்கவேண்டுமே தவிர லாபம் ஈட்டுகின்றனவா? என்று பார்க்கக் கூடாது. ஒருவேளை போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்கினாலும் நிர்வாகச் சீர்திருத்தம் மூலமாக அவற்றை சரி செய்ய வேண்டுமே தவிர, தனியார் மயமாக்க முயற்சிக்கக்கூடாது.

தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள், அம்மா மருந்தகங்கள், அம்மா உப்பு, அம்மா குடிநீர் என தனியாரால் செயல்படுத்த வேண்டிய திட்டங்களை, அரசியல் லாபம் தேடும் நோக்குடன் அரசே நடத்தி வருகிறது. அதேநேரத்தில் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசே நடத்த வேண்டிய போக்குவரத்துச் சேவையை தனியார் மயமாக்க முயல்கிறது. தமிழக அரசின் இந்த முரண்பாடான நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும். ஒரு லட்சத்து 35 ஆயிரம் ஊழியர்களுடன் செயல்பட்டு வரும் போக்குவரத்துக் கழகங்கள் தான் தமிழகத்தின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ஆகும். இவை தனியார்மயமாக்கப்பட்டால் ஊழியர்களுக்கு மட்டுமின்றி, மக்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.

இதற்கு முன் 2001-2006 ஆட்சிக் காலத்தின்போது அரசுப் போக்குவரத்துக் கழகங்களிடமுள்ள வழித்தடங்களில் 50 விழுக்காட்டை தனியார் மயமாக்க ஜெயலலிதா அரசு முயன்றதும், நீதிமன்றத்தின் உதவியுடன் அதை தொழிற்சங்கங்கள் தடுத்து நிறுத்தியதும் நாடறிந்த வரலாறு ஆகும். அதையெல்லாம் மறந்துவிட்டு, மீண்டும் அத்தகைய நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கினால், அது தேன் கூட்டின் மீது கல் எறிவதற்கு சமமானதாகும்.

அத்தகைய சூழலில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் தனியார் மயமாக்கப்படுவதைக் கண்டித்து அனைத்து போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை திரட்டி மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை பாட்டாளி தொழிற்சங்கம் நடத்தும்; மக்களின் சொத்தான போக்குவரத்துக் கழகங்களை காப்பதில் வெற்றி பெறும் என எச்சரிக்கிறேன்". இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x