மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு

மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு
Updated on
1 min read

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கி வருவதால், பல்வேறு அடிப்படை வசதிகளுக்காக மத்திய, மாநில அரசுகள் நலத் திட்டங்களை அறிவிக்கின்றன.

பெரும்பாலான பணிகள் பேரூராட்சி நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்படுவதால், மாமல்லபுரம் பேரூராட்சியைக் கைப்பற்றக் கட்சிகள் கடும் முயற்சி மேற்கொண்டன.

தேர்தலில் மாமல்லபுரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், அதிமுக 9 வார்டுகளில் வெற்றி பெற்று தலைவர் பதவியைப் பெறுவதற்கான பெரும்பான்மையை அடைந்தது. ஆளுங்கட்சியான திமுகவுக்கு 4 வார்டுகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது. மேலும், சுயேச்சை-1, மதிமுக-1 வார்டுகளில் வெற்றி பெற்றன. இதனால், ஆளுங்கட்சியான திமுகவுக்குத் தலைவர் பதவிக்குப் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், மாமல்லபுரம் பேரூராட்சிக்குத் தலைவர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

இதனால், அதிமுக சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிட உள்ள வளர்மதி யஷ்வந்த்ராவ் போட்டியின்றி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அதிமுகவினர் தெரிவித்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மாமல்லபுரம் பகுதியில் வசிக்கும் நரிக்குறவ மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து வீட்டுமனைப் பட்டா உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆனால், நரிக்குறவ மக்கள் வசிக்கும் குறிப்பிட்ட அந்த வார்டில் திமுக வேட்பாளர், அதிமுகவிடம் தோல்வியடைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in