Published : 28 Feb 2022 03:24 PM
Last Updated : 28 Feb 2022 03:24 PM

”எதிர்கட்சிகளை செயலிழக்க வைப்பதற்காகச் செயல்படுகிறார் ஸ்டாலின்” - சிறையில் ஜெயக்குமாரை சந்தித்த பின் ஓபிஎஸ் சாடல்

திருவள்ளூர்: "தங்களை எதிர்க்கின்ற எதிர்கட்சிகளை முழுவதுமாக செயலிழக்கச் செய்ய வேண்டும் என்ற நிலையில் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்" என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சாடியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்தித்து பேசினார். மேலும், கட்சியின் மூத்த நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரை சந்தித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் பேசியது: "அதிகாரத்தை கையில் வைத்திருக்கின்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், அவரது கட்டுப்பாட்டில் இருக்கின்ற காவல்துறையும் இன்று பல்வேறு வகையான, உண்மைக்கு மாறான பொய்யான வழக்குகளை, அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்வது தொடர்கதையாக சென்று கொண்டிருக்கிறது.

எதிர்கட்சியை அழித்துவிட திமுக கங்கணம் கட்டிக் கொண்டுள்ளது. தங்களை எதிர்க்கின்ற எதிர்கட்சிகளை முழுவதுமாக செயலிழக்கச் செய்ய வேண்டும் என்ற நிலையில் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

மேலும், கள்ள ஓட்டு போட வந்தவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல், அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு திமுக அரசு அச்சுறுத்தி வருகிறது. தேனி மாவட்டத்தில் 11 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில், வெற்றி பெற்றவர்களை திமுகவில் சேரும்படி காவல்துறையினர் மிரட்டி வருகின்றனர்" என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, தமிழகத்தில் கடந்த பிப்.19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. சென்னையில் நடந்த வாக்குப்பதிவின் போது, கள்ள ஓட்டுப் போட முயன்றதாக திமுக பிரமுகர் நரேஷ்குமார் என்பவரை தாக்கி அரை நிர்வாணப்படுத்திய வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஜார்ஜ்டவுன் நீதிமன்றம், ஜெயக்குமாரை மார்ச் 7-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x