Published : 28 Feb 2022 02:01 PM
Last Updated : 28 Feb 2022 02:01 PM

நரேஷ்குமாரை கைது செய்திருந்தால் ஜெயக்குமார் சம்பவமே நடந்திருக்காது: ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் பேச்சு

படங்கள்: எஸ்.குரு பிரசாத்

சேலம்: நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கிட்டத்தட்ட 13 சதவீத கள்ள ஓட்டுகளைப் பதிவு செய்து சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அவர் பேசியது: "நரேஷ்குமார் என்ற ரவுடியை முதல்வர் ஸ்டாலின் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார். ஒரு ரவுடிக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிற, இந்தியாவிலேயே ஒரே முதல்வர் தமிழக முதல்வர் ஸ்டாலின் மட்டும்தான். குற்றவாளிக்குப் பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கிற ஒரே முதல்வர் ஸ்டாலின் ஒருவர்தான்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எந்தவித பிரச்சினையும் இன்றி நடைபெறுவதற்காக குண்டர்களும், ரவுடிகளும் கைது செய்யப்படுவார்கள் என்று, தமிழக டிஜிபி அறிவிப்பு வெளியிட்டார். சென்னை மாநகர காவல் ஆணையரும், சென்னையில் உள்ள குண்டர்களும், ரவுடிகளும் கைது செய்யப்படுவராகள் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

இத்தனை அறிவிப்புகள் வெளியிட்ட பின்னரும், இந்த ரவுடி ஏன் கைது செய்யப்படவில்லை? நரேஷ்குமார் மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்துகொண்டுள்ளது, சில வழக்குகளில் நீதிமன்றம் மூலம் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இத்தனை குற்றச் செயல்களை புரிந்தவர், ஏன் வெளியில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடத்துவதற்காக குண்டர்களையும், ரவுடிகளையும் கைது செய்த காவல்துறை, ஏன் இந்த திமுக கட்சியைச் சேர்ந்த ரவுடியை கைது செய்யவில்லை. நரேஷ்குமார் கைது செய்யப்பட்டிருந்தால், இந்தச் சம்பவவே நடந்திருக்காது. இந்த ஆர்ப்பாட்டம் இங்கு நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்.

திமுகவைச் சேர்ந்த ரவுடிகளும், குண்டர்களும் சென்னையிலே சுதந்திரமாக நடமாடவிட்டது அரசு. இதன் காரணமாக கள்ள ஓட்டு போட்டு திமுக வெற்றி பெற்றிருக்கிறதே ஒழிய, ஜனநாயக முறைப்படி வெற்றி பெறவில்லை. கோவை மாநகரத்திலும், ரவுடிகளையும் குண்டர்களையும் இறக்கிவிட்டு, அங்கும் சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்த அரசு, திமுக அரசு.

இன்று, தேர்தல் ஆணையம் திமுக அரசின் கைப்பாவையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறையும், தேர்தல் ஆணையமும் கைகோத்து திமுக வெற்றி பெற துணை நின்றிருக்கிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

நேர்மையான முறையில் திமுகவினர் வெற்றி பெறவில்லை. வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்து அதன்மூலமாக வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், பெண்கள், என அனைவரும் எங்களிடம், நாங்கள் இரட்டை இலைக்குத் தானே வாக்களித்தோம், எப்படி நீங்கள் தோல்வியடைந்தீர்கள் என செல்லும் இடங்களில் எல்லாம் கேட்கின்றனர்.

இந்தத் தேர்தலில் போட்டியிட்ட சிலருக்கு ஒரு ஓட்டு கிடைத்திருக்கிறது, சிலருக்கு ஓட்டே கிடைக்கவில்லை. அப்படியென்றால் இந்த தேர்தல் எப்படி நடந்துள்ளது என்று எண்ணி பாருங்கள். வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்து, முறைகேடு செய்துதான் திமுக வெற்றி பெற்றுள்ளது. மக்கள் வாக்களித்து அவர்கள் வெற்றி பெறவில்லை.

திமுகவினர் கள்ள ஓட்டு போடுவதில் வல்லமை பெற்றவர்கள். இதனால்தான் தேர்தல் ஆணையமே, வாக்காளரின் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. அப்படி இருந்தும்கூட பல வாக்குச்சாவடிகளை கைப்பற்றி, மாலையில் 3 மணிக்குப் பிறகு, குண்டர்களும், ரவுடிகளும் ஆங்காங்கே இருக்கின்ற பூத்களில் நுழைந்து கள்ள ஓட்டு போட்டு வெற்றி பெற்றிருக்கின்றனர்.

சென்னையில் 49-வது வார்டில் கள்ள ஓட்டு போட முயன்றுள்ளதாக தேர்தல் அதிகாரியே பேட்டி கொடுத்துள்ளார். அப்படியென்றால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எந்த அளவுக்கு கள்ள ஓட்டு பதிவு செய்யப்பட்டிருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். குறிப்பாக சென்னையில்தான் அதிகமான பேர் கள்ள ஓட்டு போட்டுள்ளனர். சென்னை மாநகரத்தில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவதற்கு இதுதான் காரணம்.

2021 சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் சுமார் 67 முதல் 68 சதவீதம் வரை வாக்குப்பதிவு சதவீதம் பதிவானது. 2021-ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசாங்கம், நானும் முதல்வராக இருந்தேன். சட்டம் ஒழுங்கு பேணி காக்கப்பட்டது. ரவுடிகள் ராஜ்ஜியம் ஒடுக்கப்பட்டது, மக்கள் சுதந்திரமாக வாக்களித்தனர். ஆனால், இன்று நரேஷ்குமார் போன்ற குண்டர்களும், ரவுடிகளும் சென்னையில் சுதந்திரமாக சுற்றித் திரிந்ததால், சென்னை மாநகர மக்கள் அவர்களுக்கு பயந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றமுடியவில்லை. அதனால்தான் 43 சதவீத வாக்குகள் மட்டும் பதிவாகியுள்ளது. அதுவும் கள்ள ஓட்டு போட்டு 43 சதவீதம், உண்மையான வாக்கு சதவீதம் என்பது ஒரு 30 சதவீதமாகத்தான் இருக்கும். கிட்டத்தட்ட 13 சதவீத கள்ள ஓட்டுக்களைப் பதிவு செய்து சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாநகராங்களில் திமுகவினர் வெற்றி பெற்றுள்ளனர்.

வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்து, எந்த பட்டனும் அழுத்தினாலும், குறிப்பிட்ட வாக்குகளுக்கு மேல் திமுகவுக்குத்தான் விழும். அவ்வாறாக வாக்கு இயந்திரத்தை தயாரித்து திமுகவினர் வெற்றி பெற்றுள்ளனர்" என்று அவர் பேசினார். முன்னதாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு கண்டனம் தெரிவித்தும், திமுக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x