Published : 25 Feb 2022 01:57 PM
Last Updated : 25 Feb 2022 01:57 PM

ஆவினை விட 38% வரை கூடுதல்... தனியார் பால் விலையை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் வேண்டும்: ராமதாஸ்

ச.ராமதாஸ் | கோப்புப் படம்.

சென்னை: "தனியார் பால் விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பால் விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், தனியார் பால் விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களை இன்னும் கடுமையாக பாதிக்கும். இது உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும்.

தமிழகத்தின் பால் சந்தையில் 45 விழுக்காட்டை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ள 4 தனியார் பால் நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு பால் விலையை உயர்த்தியுள்ளன. 3% கொழுப்புச் சத்துள்ள பாலின் விலை லிட்டர் ரூ.48-லிருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 4.5% கொழுப்புச் சத்து கொண்ட தரப்படுத்தப்பட்ட பாலின் விலை ரூ.58-லிருந்து ரூ.60 ஆகவும், 6% கொழுப்புச் சத்துக் கொண்ட நிறை கொழுப்பு பாலின் விலை ரூ.62-லிருந்து ரூ.66 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதே தரத்திலான ஆவின் பால் முறையே லிட்டருக்கு ரூ.40, ரூ.44, ரூ.48 என்ற விலையில் விற்கப்படும் நிலையில், அதை விட லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.18 வரை கூடுதல் விலையில் தனியார் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

தமிழகத்தில் தனியார் பால் விலைகள், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 9 மாதங்களில் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே கடந்த ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் தனியார் பால் விலைகள் உயர்த்தப்பட்டன. தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்துவதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. தமிழக அரசின் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்வதை விட மிகக்குறைந்த விலையில் தான் தனியார் நிறுவனங்கள் பாலை கொள்முதல் செய்கின்றன. ஆனால், ஆவின் பாலை விட 25% முதல் 38% வரை கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்கின்றன.

ஆவின் நிறுவனத்தின் விலைக்கே தனியார் நிறுவனங்கள் பாலை விற்பனை செய்தால் கூட, நல்ல லாபம் ஈட்ட முடியும். ஆனால், தமிழ்நாட்டின் மொத்த பால் சந்தையில் 80% தனியாரின் கைகளில் இருப்பதால் அவை தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு, பால் விலையை உயர்த்தி கொள்ளை லாபம் ஈட்டுகின்றன. இதைக் கட்டுப்படுத்த வேண்டிய தமிழக அரசு, வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் பால் சந்தையில் ஆவின் நிறுவனத்தின் பங்கை அதிகரிப்பதன் மூலமும், பால் விலை ஒழுங்குமுறை ஆணையத்தை அமைப்பதன் மூலமும் தனியார் பால் விலையை கட்டுப்படுத்த முடியும். அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், சந்தையில் ஒரு நிறுவனமோ, ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களோ ஏகபோகம் செலுத்துவதை முறியடிக்க வேண்டும் என்பது தான் அடிப்படை ஆகும். அதனால் தான் மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் தனியாரை மக்கள் நம்பியிருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் நடத்தப்படுகின்றன. வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவதற்காகத் தான் நியாயவிலைக் கடைகள் நடத்தப் படுகின்றன. அதே பணியை தமிழக பால் சந்தையில் ஆவின் நிறுவனமும் செய்ய வேண்டும்.

குஜராத் அரசின் அமுல் நிறுவனம் தினமும் 3 கோடி லிட்டர் பாலையும், கர்நாடக அரசின் நந்தினி நிறுவனம் 80 லட்சம் லிட்டர் பாலையும் உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்கின்றன. ஆனால், தமிழக தினமும் 2.5 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படும் நிலையில், அதில் 41 லட்சம் லிட்டர் பாலை மட்டும் தான் ஆவின் கொள்முதல் செய்கிறது. ஆவின் பால் கொள்முதலை அதிகரித்தால், பால் சந்தை பங்கையும் அதிகரிக்க முடியும்; அதன் மூலம் வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும். இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தின் பால் சந்தையில் குறைந்தது 60 விழுக்காட்டையாவது கைப்பற்றும் அளவுக்கு ஆவின் நிறுவனத்தின் கொள்முதலையும், விற்பனையையும் அதிகரிக்க வேண்டும்.

மற்றொருபுறம் பால் கொள்முதல் மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்தவும், அதற்கான விலையை நிர்ணயிக்கவும் பால் விலை ஒழுங்குமுறை ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டில் தனியார் பால் விலையை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு முன்வர வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x