Published : 24 Feb 2022 03:51 PM
Last Updated : 24 Feb 2022 03:51 PM

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாள் விழா: ஓபிஎஸ், இபிஎஸ் மரியாதை

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாளையொட்டி சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஜெயலலிதா பிறந்தநாள் விழா தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளர், தமிழக முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் 74-ஆவது பிறந்த நாளான இன்று காலை (24.2.2022 – வியாழக் கிழமை), சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழகம் - எம்ஜிஆர் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள, ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கும்; கழக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கும், கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம்; கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி மு. பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அம்மா நாளிதழ் சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள சிறப்பு மலரை வெளியிட்டனர். அதன் பிரதியை அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலாளரும், தமிழ்நாடு வக்ஃபு வாரிய முன்னாள் தலைவருமான அ. தமிழ்மகன் உசேன் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, அதிமுக கொடியினை ஏற்றி வைத்து, அனைத்து நிர்வாகிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும், கட்சியின் தொண்டர்களுக்கும்இனிப்பு வழங்கினா்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பின்வரும் நிகழ்ச்சிகளை, கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வம்; கழக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி மு. பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்து சிறப்பித்தனர்.

> கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் சா. கலைப்புனிதன் எழுதிய ``புரட்சித் தலைவி அம்மாவின் அகிலம் போற்றும் பெண்கள் நலத் திட்டங்கள்’’ என்ற நூலினை வெளியிட்டனர்.

> அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலாளர் டாக்டர் அ. தமிழ்மகன்உசேன் ஏற்பாட்டின்பேரில், அனைத்துலக எம்ஜிஆர் மன்றம் சார்பில் தயார் செய்யப்பட்டிருந்த 74 கிலோ எடை கொண்ட கேக்கினை வெட்டி, கட்சியின் நிர்வாகிகளுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் வழங்கினர்.

தமது பிறந்த நாளையொட்டி, ஆடம்பர விழாக்களைத் தவிர்த்து, கட்சித் தொண்டர்கள் அவரவர் சக்திக்கேற்ப ஏழை,எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்தால், அந்நிகழ்வுகள் பயன்பெறுவோரையும் மகிழ்விக்கும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா அதிமுகவினருக்கு ஏற்கெனவே அறிவுறுத்தியதற்கிணங்க,

> கட்சியின் அமைப்புச் செயலாளரும், தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளருமான ஆதிராஜாராம், தலைமைக் கழக வளாகம் எதிரே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நலத் திட்ட உதவிகளையும், அறுசுவை உணவையும் ஏழை, எளியோருக்கு வழங்கினா்.

> முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, தலைமைக் கழகம் ஒட்டியுள்ள SVR திருமண மண்டபத்தில், கட்சியின் வர்த்தக அணிச் செயலாளர் V.N.P. வெங்கட்ராமன், Ex. MLA-வால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, ஏழை, எளியோருக்கு அறுசுவை உணவு வழங்கினர்.

இன்றைய நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும், கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; கட்சி மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கட்சியின் தொண்டர்களும், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பெருந்திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தலைமைக் கழக வளாகத்தை ஒட்டியுள்ள சாலைகளின் இருமறுங்கிலும் கழகக் கொடித் தோரணங்கள் கட்டப்பட்டு, மேள தாளம் முழங்க விழாக்கோலம் பூண்டிருந்தது. அதே போல், சாலையின் இருமறுங்கிலும் அதிமுக தொண்டர்கள் கட்சிக் கொடியினையும், அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அண்ணா தொழிற்சங்கக் கொடியினையும் தங்கள் கைகளில் ஏந்திய வண்ணம் வரவேற்பு அளித்தார்கள்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x