Published : 24 Feb 2022 02:43 PM
Last Updated : 24 Feb 2022 02:43 PM

'பத்திரிகையாளர் நல வாரியம்' அமைத்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: பத்திரிக்கையாளர்களுக்கு நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் 'பத்திரிக்கையாளர் நலவாரியம்' அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை: "தமிழக செய்தித்துறை அமைச்சர் 2021-22 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரில், 6.9.2021 அன்று நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான அறிவிப்புகளில், " தமிழகத்தில் முதன்முறையாக, உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக தமிழக முதல்வர் அறிவித்துப் பெருமை சேர்த்துள்ளார். அதனடிப்படையில் உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செவ்வனே செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் "பத்திரிகையாளர் நல வாரியம்" அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.

செய்தித்துறை அமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செவ்வனே செயல்படுத்துவதோடு, நல வாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் "பத்திரிகையாளர் நல வாரியம்" ஒன்றை உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது.

பத்திரிகையாளர் நல வாரியத்துக்கு வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, பயனாளிகளைத் தேர்வு செய்து, நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு, பத்திரிகையாளர் நல வாரியக் குழு ஒன்றை அமைத்து, அதற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை பின்வருமாறு நியமித்து அரசு ஆணையிடுகிறது.

இந்த நல வாரியத்தின் தலைவராக செய்தித்துறை அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி (ம) நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர், தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர், தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை ஆணையர், நில நிர்வாகத்துறை ஆணையர் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர்/துணைச் செயலாளர் உள்ளிட்டோர் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சிவந்தி ஆதித்யன் பாலசுப்பிரமணியன் (தினத்தந்தி குழுமம்), ஆர்.எம்.ஆர்.ரமேஷ் (தினகரன் நாளிதழ்), பி.கோலப்பன் (துணை ஆசிரியர், தி இந்து), எஸ்.கவாஸ்கர் (செய்தியாளர், தீக்கதிர் நாளிதழ்), எம்.ரமேஷ் (சிறப்பு நிருபர், புதிய தலைமுறை தொலைக்காட்சி), லெட்சுமி சுப்பிரமணியன் (முதன்மை சிறப்பு நிருபர், தி வீக் செய்தி வார இதழ்) ஆகியோர் அலுவல்சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அரசாணையின்படி, பத்திரிகையாளர் ஓய்வூதியப் பரிசீலனைக் குழு கலைக்கப்படுவதுடன், பத்திரிகையாளர் நலவாரிய புதிய நல உதவித் திட்டங்களுக்கு அமைக்கப்படும் மேற்காணும் குழுவே பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் குறித்த மனுக்களையும் பரிசீலிக்கும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும், நீதிப் பேராணை மனு என் 32091/2019-ன் மீதான மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டதாகும்" என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x