Last Updated : 17 Apr, 2016 11:09 AM

 

Published : 17 Apr 2016 11:09 AM
Last Updated : 17 Apr 2016 11:09 AM

ஒரத்தநாடு சட்டப்பேரவைத் தொகுதியில் ஒதுங்கிய ராஜ்குமார், களம்புகுந்த ராமச்சந்திரன்: திமுகவில் திடீர் திருப்பம்

ஒரத்தநாடு தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச்சர் ஆர்.வைத்திலிங்கத்துக்கு எதிராக, திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜ்குமார் போட்டி யிலிருந்து ஒதுங்கிக்கொண்டதால், முன்னாள் எம்எல்ஏ எம்.ராமச்சந்திரன் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகருக்கு அடுத்து, அதிமுக வட்டாரம் மட்டுமில்லாமல் திமுக வட்டாரமும் உற்று நோக்கும் தொகுதியாக ஒரத்தநாடு உள்ளது. அதிமுகவின் முக்கியத் தூண்களாக இருந்த நால்வர் அணியின் மற்ற மூவரும் ஓரம் கட்டப்பட்ட சூழலில், ஜெயலலிதாவுக்கு அடுத்து தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள வைத்திலிங்கம், ஒரத்தநாடு தொகுதியில் கடந்த 3 முறை தொடர்ந்து வெற்றிபெற்று, 4-வது முறையாக தற்போது களமிறங்கியுள்ளார்.

ஒரத்தநாடு ஒன்றியம் தெலுங்கன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த இவருக்கு எதிராக, திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கத்தின் தம்பி எஸ்.எஸ்.ராஜ்குமார், தஞ்சாவூர் தொகுதியைக் கேட்டே விருப்ப மனு அளித்திருந்தார். ஆனால், இவருக்கு ஒரத்தநாடு தொகுதி ஒதுக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 தொகுதிகள் இருந்தாலும், ஒரத்தநாடு தொகுதியில் மட்டும் மண்ணின் மைந்தர்களே, குறிப்பாக கள்ளர் சமூகத்தினரே நிறுத்தப்படுவதும், வெற்றிபெறுவதும் வழக்கமாக உள்ளது.

ராஜ்குமார், கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதாலும், வைத்திலிங்கம், மண்ணின் மைந்தர் என்பதுடன், தோற்றால் தனது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதால் பெரும் தொகையை செலவிடத் தயார் நிலையில் உள்ளதாக அரசியல் பிரமுகர்கள் கூறும் நிலையில், தற்போதுள்ள திமுக ஒன்றியச் செயலாளர்கள் பலரும் டி.ஆர்.பாலு அணியைச் சேர்ந்தவர்கள் என்பதால் வெற்றி வாய்ப்பு சந்தேகம் எனக்கருதி, ராஜ்குமார் போட்டியிலிருந்து விலக முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால்தான் அவர், தேர்தல் பணியைத் தொடங்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று காலை, ஒரத்தநாடு தொகுதியுடன் தற்போது இணைக்கப்பட்டுள்ள திருவோணம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ, எம்.ராமச்சந்திரன், திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அறிந்த திமுகவினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இதை வியப்புடன் பேசி வருகின்றனர்.

இதுகுறித்து திமுக வட்டாரங்கள் தெரிவித்தது: ராஜ்குமாரின் அண்ணன் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், திமுக தலைவர் கருணாநிதியை நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, நடப்புச் சூழலையும், அதனால், போட்டியிலிருந்து விலகும் முடிவையும் தெரிவித்துள்ளார்.

உடனே, பழநிமாணிக்கத்தை தொடர்பு கொண்டு சமாதானம் செய்த மு.க.ஸ்டாலினிடம், “ஒரத்தநாட்டைப் பொறுத்தவரை உள்ளூர் கான்செப்ட்தான் எடுபடும். உங்களால் நியமிக்கப்பட்ட ஒன்றியச் செயலாளர்கள் தனி அணியாக உள்ளனர். அதனால், ஒரத்தநாடு தொகுதி வேண்டாம். நானும் என் தம்பியும் நீங்கள் கை காட்டும் வேட்பாளர்களின் வெற்றிக்காகப் பாடுபடுவோம்” என பழநிமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்தே, எம்.ராமச்சந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார்.

திருவோணம் தொகுதியின் பெரும்பகுதி ஒரத்தநாடு தொகுதியில் உள்ளதாலும், கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த, எளிமையான, மக்களிடம் நன்கு அறிமுகமான ராமச்சந்திரன், வைத்திலிங்கத்துக்குச் சரியான போட்டியாக இருப்பார். ஆனால், அவர் அளவுக்கு இவரால் செலவிட இயலாது” என்கின்றனர்.

இதுதான் முதல் முறை

திமுகவில் வேட்பாளர்கள் மாற்றம், தொகுதி மாற்றம் அரிதாகத்தான் நடைபெறும். ஆனால், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒருவர், விலகிக் கொண்டது இதுதான் முதல் முறை என்கின்றனர் கட்சியினர்.

ராஜ்குமாரை அறிவித்தது ஏன்?

2001 முதல், ஒரத்தநாடு தொகுதியில் வெற்றிகொள்ளப்பட முடியாத நபராக உள்ள வைத்திலிங்கம், கட்சியின் மாவட்டச் செயலாளராகவும், திமுக கோட்டையான தஞ்சாவூர் தொகுதி உள்ளிட்ட மாவட்டத்தின் மற்ற தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு காரணமாகவும் உள்ளார் என்பதால், இந்த முறை அவருக்கு தோல்வி பயத்தை ஏற்படுத்தி, அவரது செயல்பாட்டை ஒரத்தநாட்டுக்குள்ளேயே முடக்கும் நோக்கிலேயே, அனைத்து வகையிலும் அவருக்கு ஈடு கொடுக்கக்கூடிய ராஜ்குமாரை கட்சித் தலைமை நிறுத்தியதாகவும், வேறு சில காரணங்களும் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x