Published : 23 Feb 2022 04:52 PM
Last Updated : 23 Feb 2022 04:52 PM

பாஜக நிர்வாகிகளுக்கு உத்வேகம் தந்த அண்ணாமலைக்கு பாராட்டுகள்: பொன்.ராதாகிருஷ்ணன்

கோப்புப் படம்

சென்னை: ”நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு கிடைத்துள்ள வெற்றி என்பது, ஒவ்வொருவரின் அயராத உழைப்பிற்கு கிடைத்த வெகுமதி” என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்கள், நகராட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பேரூராட்சிப் பிரதிநிதிகள் ஆகியோர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். வேட்பாளர்கள் வெற்றிக்காகப் பணியாற்றிய மாவட்டத் தலைவர்கள், கட்சியின் பொறுப்பாளர்கள், பாஜகவின் தொண்டர்கள் என ஒவ்வொருவரின் அயராத உழைப்புக்கும் கிடைத்த வெகுமதி இவ்வெற்றி.

குறுகிய காலத்தில் மாநிலத்தில் தேர்தல் நடத்த அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ச்சியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு, பாஜக நிர்வாகிகளுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும், தந்த மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல தேர்தல் பொறுப்பாளர்கள் என அனைவரின் உழைப்பையும் மனதார பாராட்டுகிறேன். களப்பணியில் அயராது உழைத்த பாஜக-வினருக்கு என் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

தனியாக தேர்தலைச் சந்திக்கும் நிலையில் எங்களுக்கு சிறந்த வழிகாட்டுதலை வழங்கிய தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ் ஆகியோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெற்றி ஒன்றே இலக்கு என்ற லட்சியத்துடன் பணியாற்றிட எங்களுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும், வழிகாட்டலையும், நல்கிய பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக வேண்டுகோளை ஏற்று இத்தேர்தலில் வாக்களித்து பெருமை சேர்த்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு என் நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து தொய்வின்றி பணியாற்றுவோம், பிரதமர் மோடியின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்போம், அதன் மூலம் வரும் காலக்கட்டங்களில் இன்னும் பல மகத்தான வெற்றிகளை காண்போம்" என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x