Published : 21 Feb 2022 10:01 PM
Last Updated : 21 Feb 2022 10:01 PM

'நான் ஓட மாட்டேன்; வர்றேன் தான் சொல்லுறேன்' - ஜெயக்குமார் கைதின்போது வாக்குவாதம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ராயபுரம் தொகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக ஒருவரை அதிமுகவினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கத் தொடங்கினர். அப்போது, பிடிபட்ட நபரை அடிக்க வேண்டாம் என்றும், அவரது கையை கட்டும்படியும் கூறிய ஜெயக்குமார், அந்த நபரை சட்டையின்றி சாலையில் அழைத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகின. ஜெயக்குமார் மற்றும் அதிமுக தொண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளான நபர் திமுக தொண்டர் நரேஷ் என்பவர்.

இதுதொடர்பாக நரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது தாக்குதல், கலகம் செய்ய தூண்டுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல், ஜெயக்குமார் கார் ஓட்டுநர் ஜெகன்நாதன் அளித்த புகாரின்பேரில் திமுக தரப்பைச் சேர்ந்த 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்குப் பதிவை அடுத்து சில மணிநேரங்கள் முன் ஜெயக்குமாரை போலீஸார் கைது செய்தனர். சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்த கைதின் போது போலீஸுக்கும், ஜெயக்குமார் மகன் ஜெயவர்த்தனுக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. இதனை வீடியோவாக எடுத்து ஜெயவர்த்தன தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ஜெயக்குமார் மாற்றுஉடை அணிந்து வருவதாக சொல்கிறார். அதனை ஏற்றுக்கொள்ளாத காவல்துறையினர் லுங்கியுடனே வரச் சொல்கின்றனர். இதனை ஜெயவர்த்தனும், அவரின் தாயாரும் எதிர்க்கிறார்கள். பின்னர் அடிப்படை உரிமைகளைகூட நீங்கள் மறுக்கிறீர்கள் என்று ஜெயவர்த்தன் போலீஸிடம் வாக்குவாதம் செய்கிறார். இந்தக் காட்சிகள் அந்த வீடியோவில் அடங்கியுள்ளன.

இதனிடையே, ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஜெயக்குமாரை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது" என்று கூட்டாக தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x