Last Updated : 30 Jun, 2014 10:00 AM

 

Published : 30 Jun 2014 10:00 AM
Last Updated : 30 Jun 2014 10:00 AM

3 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்க சர்வதேச தரத்தில் தண்டவாளம் அமைப்பு- பிரேசில் சென்று தண்டவாளத்தின் தரத்தை ஆய்வு செய்தது அதிகாரிகள் குழு

சென்னையில் 3 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்குவதற்கு வசதியாக சர்வதேச தரத்தில் மெட்ரோ ரயில் தண்டவாளம் தயாரிக்கப்படுகிறது. பிரேசில் நாட்டில் தயாரிக்கப்படும் தண்டவாளங்களை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் குழு கடந்த வாரம் ஆய்வு செய்தது.

சென்னையில் ரூ.20 ஆயிரம் கோடி (தற்போதைய மதிப்பீடு) செலவில் இருவழித் தடங்களில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக வரும் அக்டோபர் மாத இறுதியில் கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதல்கட்ட மெட்ரோ ரயில் போக்குவரத்தைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலுக்கு சர்வதேச தரத்தில் 1.435 மீட்டர் இடைவெளி கொண்ட தண்டவாளம் அமைக்கப்படுகிறது. சென்னையில் நெரிசல் நேரத்தில் 3 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்குவதற்கு வசதியாக பிரேசில் நாட்டில் சர்வதேச தரத்தில் சென்னை மெட்ரோ ரயிலுக்கு தண்டவாளங்கள் தயாரிக்கப்பட்டு, கப்பலில் சென்னைக்கு அனுப்பப்படுகின்றன. கடந்த வாரம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் மற்றும் எல் அண்ட் டி நிறுவன அதிகாரிகள் கொண்ட குழு பிரேசில் சென்று தண்டவாளங்கள் தயாரிப்புப் பணியை ஆய்வு செய்தனர்.

இரு நாட்கள் வரை நீடித்த இந்த ஆய்வு குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:

லண்டனில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்குன்துரோப் என்ற இடத்தில் உள்ள டாடா குழுமத்துக்குச் சொந்தமான டாடா ஸ்டீல் பேக்டரியில் தயாரிக்கப்படும் இரும்பு பாளங்கள் பிரேசில் நாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே தண்டவாளங்கள் தயாரிக்கப்படுகின்றன. பின்னர் பிரேசிலில் இருந்து கப்பலில் சென்னைக்கு அனுப்பப்படுகின்றன.

சென்னையில் நெரிசல் நேரத்தில் 3 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்க திட்டமிட்டிருப்பதால், ரயில் தண்டவாளத்தின் மேல்பகுதி (ரயில் சக்கரம் ஓடும் பகுதி), அதிக வலுமிக்கதாக உருவாக்கப்படுகிறது. அதன்படி, ஒரு மீட்டர் நீள தண்டவாளத்தின் எடை 60 கிலோ. இந்தியன் ரயில்வேயில் அமைக்கப்படும் தண்டவாளத்தின் ஒரு மீட்டர் நீள எடை 52 கிலோதான். சாதாரண தண்டவாளத்தை விட மெட்ரோ ரயில் தண்டவாளத்தின் ஆயுள்காலம் இரு மடங்காகும். விலையும் 20 சதவீதம் அதிகம்.

சென்னையில் முதல்கட்டமாக 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரட்டைப் பாதையில் 230 கிலோ மீட்டர் நீளத்துக்கு தண்டவாளம் அமைக்கப்படவுள்ளது. இதுவரை 60 கிலோ மீட்டர் நீளத்துக்கு தேவையான தண்டவாளம் பிரேசிலில் இருந்து வந்துவிட்டது. இதில், கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரட்டைப் பாதையில் 40 கிலோ மீ்ட்டர் நீள தண்டவாளமும், கோயம்பேடு பணிமனையில் 20 கிலோ மீட்டர் நீளத்துக்கு தண்டவாளமும் அமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. மெட்ரோ ரயில் தண்டவாளம் அமைக்கும் பணியை ரூ.500 கோடி செலவில் எல் அண்ட் டி நிறுவனமும், அல்ட்ஸ்டாம் நிறுவனமும் இணைந்து மேற்கொள்கின்றன.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x