Last Updated : 01 Apr, 2016 07:38 AM

 

Published : 01 Apr 2016 07:38 AM
Last Updated : 01 Apr 2016 07:38 AM

கிரானைட் வழக்கில் பி.ஆர்.பழனிச்சாமி விடுதலை: மேலூர் நீதித்துறை நடுவரிடம் மாவட்ட நீதிபதிகள் நேரில் விசாரணை

கிரானைட் கற்களை அரசுடமை யாக்கக் கோரும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்தும், வழக்கு தொடர்ந்த ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டது தொடர்பாக மேலூர் நீதித்துறை நடுவர் கே.வி.மகேந்திரபூபதியிடம் மதுரை மாவட்ட நீதிபதிகள் 2 பேர் சுமார் இரண்டரை மணி நேரம் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை அரசுடமையாக்கக்கோரி மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் அரசு தரப்பில் 180 வழக்குகள் தாக்கல் செய்யப்பட் டுள்ளன. கீழையூர், கீழவளவு பகுதிகளில் பி.ஆர்.பழனிச்சாமி மற்றும் சகாதேவன் ஆகியோர் வைத்திருக்கும் கிரானைட் கற்களை அரசுடமையாக்கக்கோரி 2013-ம் ஆண்டில் அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் இரு வழக்குகளை தாக்கல் செய்தார்.

அந்த வழக்குகளை மேலூர் நீதித்துறை நடுவர் கே.வி.மகேந்திரபூபதி கடந்த 29-ம் தேதி தள்ளுபடி செய்தார். அத்துடன் அந்த வழக்கில் இருந்து பி.ஆர்.பழனிச்சாமி, சகாதேவன் ஆகியோரை விடுதலை செய்தும், அந்த வழக்கை தாக்கல் செய்த ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ரா மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் ஞானகிரி, ஷீலா ஆகியோர் மீது அரசின் அனுமதி பெற்று குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார்.

இதே கிரானைட் வழக்கு களில் மேலூர் நீதித்துறை நடுவர் மகேந்திரபூபதி, குற்றம்சாட்டப் பட்டவர்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதாகவும், குற்றப்பத்திரி கையில் கூறப்பட்டுள்ள கடுமை யான குற்றச்சாட்டுகளை விசார ணைக்கு ஏற்க மறுத்து, சாதாரண திருட்டுக் குற்றத்தை மட்டும் விசாரணைக்கு ஏற்று, குற்றம்சாட்டப் பட்டவர்களுக்கு சாதகமாக செயல் படுவதாகவும் அரசு தரப்பில் ஏற்கெனவே அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றப்பத்திரி கையில் கூறப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசார ணைக்கு ஏற்குமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் அவர் பின்பற்றவில்லை.

இதனால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள் ளுமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பில் வேண்டு கோள் வைக்கப்பட்டது. அந்த வேண்டுகோளை ஏற்று, மேலூர் நீதித்துறை நடுவர் மகேந்திரபூபதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதிக்கு கடந்த வாரம் நீதிபதி பி.என்.பிரகாஷ் பரிந்துரை செய்தார்.

இந்த சூழலில் கிரானைட் கற்களை அரசுடமையாக்கக் கோரிய வழக்கில் பி.ஆர்.பழனிச் சாமி, சகாதேவனை விடுதலை செய்தும், வழக்கு தொடர்ந்த ஐஏஎஸ் அதிகாரி மற்றும் அரசு வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டது, உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான வகையில் அமைந்தது.

இந்நிலையில் மதுரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஏ.எம்.பஷீர்அகமது மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதி சரவணன் ஆகியோர் நீதித்துறை நடுவர் மகேந்திரபூபதியிடம் நேற்று இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தினர்.

ஏற்கெனவே கிரானைட் வழக்கின் தீர்ப்பு தொடர்பாக மேலூர் நடுவர் கே.வி.மகேந்திரபூபதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர் ஒருவர் நேரில் முறையிட்டார். இந்நிலையில் இந்த விசாரணை நடைபெற்றுள்ளது.

இந்த விசாரணை அறிக்கையை மாவட்ட நீதிபதிகள் உயர் நீதிமன்றத்துக்கு அனுப்புவர். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். கிரானைட் வழக்கின் தீர்ப்புக்காக நீதித்துறை நடுவரிடம் மாவட்ட நீதிபதிகள் 2 பேர் நேரில் விசாரணை மேற்கொண்டது நீதித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x