Published : 21 Feb 2022 07:52 AM
Last Updated : 21 Feb 2022 07:52 AM

சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவு: வேட்பாளர்களின் அலட்சியம், மாநகராட்சியின் தவறுகளே காரணம்

படம்: மு. லெட்சுமி அருண்.

சென்னை: சென்னை மாநகராட்சித் தேர்தலில், 200 வார்டுகள் உறுப்பினர் பதவிகளுக்கு 2,670 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 61.73 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், கடந்த19-ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 26.94 லட்சம் பேர் (43.65 %) மட்டுமே வாக்களித்தனர். அதிகபட்சமாக திருவொற்றியூர் மண்டலம், 1-வது வார்டில் 72 %, குறைந்தபட்சமாக கோடம்பாக்கம் மண்டலம், 133-வது வார்டில் 31% வாக்கு பதிவாயின.

சென்னை மாநகராட்சியில் 2011-ல் நடைபெற்ற தேர்தலில் 52.67 % வாக்குகள் பதிவாயின. அப்போது வாக்காளர் பட்டியலில் இருந்தோர் பெயர்கள், சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் சென்றவர்கள், சென்னைக்குள் வீடு மாறியவர்கள், சொந்த ஊரிலும், சென்னையிலும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கும் நடைமுறைகள் அப்போது இல்லை. அதனால் அப்போது வாக்குப்பதிவு சதவீதம் குறைவாக இருந்தது.

இப்போது ஆண்டுதோறும் வீடு வீடாக ஆய்வு செய்யப்படுகிறது. நீண்ட நாட்களாக இல்லாதவர்கள் பெயர்கள் நீக்கப்படுகின்றன. மாநகராட்சி இறப்பு பதிவேட்டின்படி இறந்தவர் பெயர்கள் நீக்கப்படுகின்றன. இந்திய தேர்தல் ஆணைய நவீன மென்பொருள் மூலம் ஒருவருக்கு ஓர் இடத்தில் மட்டும் வாக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நடைமுறைகள் வந்த பிறகும் சென்னையில் வாக்குப்பதிவு குறைவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மக்கள் சிலர் ‘இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது: 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக பெரிய அளவில் வாக்காளர்களுக்கு செலவிடவில்லை. ஆனால் முழு வெற்றியைப் பெற்றது. தானாக வாக்களிக்கும் மக்களுக்கு எதற்கு செலவு செய்ய வேண்டும் என்று இப்போது திமுகவினர் செலவிடவில்லை. பணம் கொடுத்தாலும் அதிமுகவுக்கு மக்கள் வாக்களிக்காததால், இந்த முறை அவர்கள் செலவிடவில்லை. செலவிடவும் போலீஸார் விடவில்லை. வாங்கி பழக்கப்பட்ட மக்கள், இந்த முறை எதுவும் கிடைக்காததால் வாக்களிக்க மறுத்தனர்.

முந்தைய மாநகராட்சித் தேர்தல்களில் வேட்பாளர்கள் அறிமுகமானவராக இருந்தனர். வேட்பாளரின் ஆதரவாளரும் தெரிந்த நபர்களாக இருந்தனர். தேர்தல் நேரத்தில் எங்களிடம் வந்து, குடும்ப உறுப்பினராக மாறி சில நிமிடங்கள் பேசுவார்கள். இந்த முறை அப்படி இல்லை. யாரும் எங்களை சந்தித்து பேசவில்லை. விலை மதிப்பில்லாத எங்கள் வாக்கை, எங்களை மதிக்காத வேட்பாளருக்கு செலுத்த விரும்பவில்லை.

இதை எல்லாம் மீறி வாக்களிக்கச் சென்றால், எந்த வாக்குச்சாவடியில் எங்கள் பெயர் உள்ளதென தெரியவில்லை. வாக்காளர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். மாநகராட்சி நிர்வாகம் வழக்கமாக வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலமாக வீடு வீடாக வாக்குச்சாவடி சீட்டுகள் வழங்கும். இந்த முறை மலேரியா கொசு ஒழிப்பு பணியாளர்களைப் பயன்படுத்தியதால் வீடு வீடாக வாக்குச்சாவடி சீட்டுகளை கொண்டு போய் சேர்க்கவில்லை. பலர் வாக்குச்சாவடியைக் கண்டுபிடிக்க முடியாமல் எரிச்சலுடன் வீடு திரும்பினர்.

சென்னையில் வாடகைக்கு குடியிருப்போர் அதிகமாக உள்ளனர். அவர்கள் அடிக்கடி வீடுகளை மாற்றுகின்றனர். அதற்கேற்றவாறு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் நடைமுறை சிக்கலாக உள்ளது. சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்தாலும் முறையாக பரிசீலிப்பதில்லை. இந்த நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும். வாக்குப்பதிவு குறைய இதுவும் ஒரு காரணமாகும்.

இந்திய தேர்தல் ஆணைய வாக்காளர் பட்டியலில் ஜன.20-ம் தேதி வரை இருந்த பெயர்களை மட்டுமே உள்ளாட்சி வாக்காளர் பட்டியலில் மாநகராட்சி சேர்த்துள்ளது. அதன் பிறகு மேற்கொண்ட திருத்தங்களை மாநகராட்சி பரிசீலிக்கவே இல்லை. நோட்டா வசதியும் இல்லை. அதற்கு இணையாக யாருக்கும் வாக்களிக்கவில்லை என்று வாக்காளர் தெரிவிக்கும் படிவத்தை பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வழங்கவில்லை. எனவே வேட்பாளர்கள் அலட்சியம், மாநகராட்சியின் தவறுகளே வாக்குபதிவு குறைந்ததற்கு காரணமாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக வேட்பாளர்கள் சிலரிடம் கேட்டபோது, ``பிரச்சாரத்துக்கு மாநில தேர்தல் ஆணையம் 10 நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுத்தது. அதற்கேற்றவாறு எங்கள் பிரச்சாரத்தை மாற்றிக் கொண்டோம்'' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x