Published : 20 Feb 2022 05:09 PM
Last Updated : 20 Feb 2022 05:09 PM

தேர்தலை ரத்து செய்து மறுவாக்குப்பதிவு நடத்துவதே நியாயமானதாக இருக்க முடியும்: கமல்ஹாசன்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து மறுவாக்குப்பதிவு நடத்துவதே நியாயமானதாக இருக்க முடியும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தி: "ஆட்சியதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் திமுகவும், பணபலம் கொண்ட அதிமுகவும் தேர்தல் ஜனநாயகத்தை தமிழகத்தில் கேலிக்கூத்தாக்கி விட்டன. அனைத்து வார்டுகளிலும் பணமும் பரிசுப் பொருட்களும் விநியோகம் ஆனது. வெளியூரில் இருக்கும் வாக்காளர்கள் பணமளித்து வரவழைக்கப்பட்டார்கள்.

வேட்பாளர்கள் மிரட்டப்பட்டார்கள். பிரச்சாரத்திற்குச் செல்கையில் அடித்து விரட்டப்பட்டார்கள். தேர்தல் நாளில் வாக்குச் சாவடியிலே பணம் விநியோகம் செய்யப்பட்டது. உச்சகட்ட அநீதியாக வாக்குச்சாவடிகளின் கதவுகளைப் பூட்டிக்கொண்டு கள்ள ஓட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் இச்செயல்களை தேர்தல் அதிகாரிகளால் தடுக்க முடியவில்லை. தங்கள் வாக்கைப் பதிவு செய்யவந்த மாற்றுக்கட்சி வேட்பாளர்களை வாக்காளர்கள் என நினைத்து பணம் கொடுக்க முயன்றது அவல நகைச்சுவை. உள்ளாட்சிப் பதவிகளைக் கைப்பற்றி மக்கள் பணத்தை துளி விடாமல் உறிஞ்சுவிடத் துடிக்கும் கழகங்களில் ஊழல்வெறிக்கு ஜனநாயகம் பலியாகியுள்ளது.

தேர்தல் அத்துமீறல்களை மாநில தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளோம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து மறுவாக்குப்பதிவு நடத்துவதே நியாயமானதாக இருக்க முடியும்". இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, தேர்தலில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், மாலை 5 மணிக்கு மேல் தமிழகம் எங்கும் கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள்கள் இன்று காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கண்களில் கருப்புத்துணியைக் கட்டியபடி தேர்தல் ஆணையத்தை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

கள்ள ஓட்டுகள் செலுத்தப்பட்டுள்ளதால், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், மறு வாக்குப் பதிவு நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமாரிடம் மனு அளித்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x