Published : 19 Feb 2022 02:05 PM
Last Updated : 19 Feb 2022 02:05 PM

மனவேதனை, வெறுப்பின் உச்சத்தால் மக்கள் வாக்களிக்க வரவில்லை: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: "வெறுமனே ஓட்டுக்கு காசு கொடுத்து, எல்லோரையும் ஏமாற்றி, இவர்கள் ஆட்சிக்கு வந்துவிடுகின்றனர், இதனால் எதற்கு வாக்களிக்க வேண்டும் என்ற மனவேதனை மற்றும் வெறுப்பின் உச்சம்தான் இன்று யாருமே வாக்களிக்க வரவில்லை, இந்த நிலையை தடுக்க வேண்டும்" என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்களித்தார். அவருடைய மகன்கள் சண்முக பாண்டியன் மற்றும் விஜய பிரபாகரன் ஆகியோரும் வாக்களித்தனர். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் பேசியது: "ஏன் இன்று வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது என்று யாராவது கூற முடியுமா? மக்களுக்கே இந்த ஜனநாயகத் தேர்தலின் மீது நம்பிக்கை இல்லை என்பதுதான் உண்மை. வெறுமனே ஓட்டுக்கு காசு கொடுத்து, எல்லோரையும் ஏமாற்றி, இவர்கள் ஆட்சிக்கு வந்துவிடுகின்றனர், இதனால் எதற்கு வாக்களிக்க வேண்டும் என்ற மனவேதனை மற்றும் வெறுப்பின் உச்சம்தான் இன்று யாருமே வாக்களிக்க வரவில்லை, இந்த நிலையை தடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

நான் பிரச்சாரத்துக்கு சென்ற இடங்களில் எல்லாம் மக்களிடம் ஒரு வெறுப்பை பார்க்க முடிந்தது. மக்கள் யாருக்கும் விருப்பமில்லை. ஒவ்வொரு முறை தேர்தல் வந்தால், வாக்களிக்க பணம் கொடுக்கிறார்கள், கொடுக்கின்ற எந்த வாக்குறுதியும் நிறைவேற்றுவது இல்லை. இதுக்கு எதற்கு வாக்காளிக்க செல்ல வேண்டும் என்ற வெறுப்பின் உச்சத்தை என்னால் பார்க்க முடிந்தது. எனவேதான் ஜனநாயக ரீதியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

சென்னையில் மொத்தமுள்ள 200 வார்டுகளில், 156 இடங்களில் தேமுக சார்பில் உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர். இந்தமுறை பெண்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பெண்கள் தேர்தலில் போட்டியிட தயங்கியதால், மற்ற இடங்களில் தேமுதிக போட்டியிடவில்லை. அதேநேரம் பெண்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்ததை நாங்கள் வரவேற்கிறோம்.

மக்களுக்கு வாக்களிப்பதற்காக இரண்டு கட்சிகளுமே பணம் கொடுக்கின்றனர். யார் ஆட்சிக்கு வந்து ஊழல் செய்தார்களோ அவர்கள்தான் ஓட்டுக்கு பணம் கொடுக்க முடியும். வேறு யாரும் கொடுக்க முடியாது. ஆண்ட கட்சியும், ஆளுகின்ற கட்சியும், மத்தியில் ஆளும்கட்சி உட்பட மூன்று கட்சிகளுமே ஓட்டுக்கு பணம் கொடுக்கின்றனர். கொலுசு, மூக்குத்தி உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் கொடுக்கின்றனர். நான் கோவை சென்றபோது பார்த்தேன். வீடு வீடாக டிபன் பாக்ஸ் விநியோகம் செய்கின்றனர். ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து என அனைத்துமே நடந்து கொண்டிருக்கிறது" என்று அவர் கூறினார்.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் 12,500-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x