Published : 11 Apr 2016 07:14 AM
Last Updated : 11 Apr 2016 07:14 AM

‘படிப்படியாக மதுவிலக்கு’ என்ற அதிமுகவின் வாக்குறுதி: காலம் கடந்து வந்தாலும் வரவேற்கத்தக்கதே - தேர்தலின்போதே அமல்படுத்த மதுஒழிப்பு போராளி நந்தினி வலியுறுத்தல்

காலம்கடந்து வந்தாலும், ‘படிப்படி யாக மதுவிலக்கு’ என்று அதிமுக வாக்குறுதி அளித்திருப்பது வரவேற் கத்தக்கது. இதற்கு முன்னோட் டமாக, தேர்தல் நேரத்திலேயே டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடி தனது வாக்குறுதியை அதிமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று மது ஒழிப்பு போராளி மாணவி நந்தினி கூறியுள்ளார்.

மதுவுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருபவர் மதுரை சட்டக் கல்லூரி மாணவி நந்தினி. இதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி இதுவரை 59 முறை சிறை சென்றவர். ‘சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைத்த வுடன், தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்’ என்று முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருப்பது, ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் கிடைத்த வெற்றி என்று பூரிக்கிறார் நந்தினி.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் நந்தினி மேலும் கூறியதாவது:

இதுபோன்ற அறிவிப்பை தேர்தல் நேரத்தில் அதிமுக கண்டிப்பாக அறிவிக்கும் என்பது எல்லோரும் எதிர்பார்த்ததே. இப்போதும் அறிவிக்காவிட்டால் கட்டாயம் ஓட்டு கிடைக்காது என்று தான் கடைசிக்கட்டத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மக்களின் மனநிலை இன்று மதுவுக்கு எதிராக திரும்பிவிட்டது. குஜராத், பிஹார் போல தமிழகத்திலும் பூரண மதுவிலக்கு பிரச்சாரங்களை முன்வைத்தால் மட்டுமே தேர்தல் நேரத்தில் எடுபடும் என்பதை எல்லாக் கட்சிகளும் நன்கு புரிந்து வைத்திருக்கின்றன.

இந்த விஷயத்தில் திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளுமே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவை. ஒருவேளை, அதிமுக இவ்வாறு அறிவிக்காமல் இருந்திருந்தால், அதிமுகவை தோற்கடிக்க தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்திருப்பேன்.

இந்த அறிவிப்பை முதல்வர் முன்கூட்டியே அறிவித்திருந்தால் சசிபெருமாள் மாண்டு போயிருக் கமாட்டார். பாடகர் கோவன் மீதும், என் மீதும் வழக்குகள் பாய்ந்திருக்காது. எத்தனையோ குடும்பங்கள் மது அரக்கனின் பிடியில் சிக்கி சீரழிந்திருக்காது. காலம்கடந்து வந்திருந்தாலும், அதிமுகவின் இந்த அறிவிப்பு கட்டாயம் வரவேற்கத்தக்கது.

நியாயமான, அமைதியான தேர்தலை நடத்துவோம் என உறுதி பூண்டுள்ள தேர்தல் ஆணையமும், இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் தேர்தல் நேரத்தில் மதுவால் ஏற்படும் குற்றங்கள் குறையும். திமுக போன்ற பிற கட்சிகளும் இதற்கு அரசியல் சாயம் பூசாமல், ஆதரவு தரவேண்டும்.

ஏனென்றால் யாருக்கு ஓட்டு போட்டால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டுவர முடியும் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். இல்லையெனில், தேர்தல் நேரத்தில் குடிக்காத இளைஞர்கள்கூட போதைக்கு அடிமையாகி புது குடிகாரர்கள் உருவாக தேர்தல் ஆணையமும் ஒரு காரணகர்த்தாவாகிவிடும்.

இவ்வாறு நந்தினி கூறினார்.

‘இப்போதே அமல்படுத்துவது சாத்தியம் அல்ல’

நந்தினி கூறுவதுபோல, ‘படிப்படியாக மதுவிலக்கு’ என்பதை இப்போதே நடைமுறைக்கு கொண்டுவருவது சாத்தியமா? இதுபற்றி தேர்தல் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மீண்டும் பதவிக்கு வந்தால் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறியது ஆகாது. ஒருவேளை, இத்திட்டத்தை ஏற்கெனவே அமல்படுத்தியிருந்தால், தொடர்வதில் தவறு இல்லை. ஆனால், இந்த திட்டத்தை தற்போது புதிதாக அமல்படுத்த முடியாது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x