Published : 18 Feb 2022 01:14 PM
Last Updated : 18 Feb 2022 01:14 PM

நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்காத தமிழக அரசின் நிலைப்பாடு: ஜவாஹிருல்லா வரவேற்பு

சென்னை: 'நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது என்ற தமிழக அரசின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது' என மனித நேய மக்கள் கட்சித் தலைவரும், எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேனி மாவட்டம் தேவாரம் பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் பல்லாயிரக்கணக்கான டன் வெடிபொருட்களைப் பயன்படுத்தி பாறைகளை வெட்டி எடுத்து ஒன்றரை கிலோ மீட்டர் ஆழத்தில் நீளவாக்கிலும் குறுக்கு வாக்கிலும் மூன்று கிலோ மீட்டர் நீளம் கொண்ட இரண்டு குகைகளைக் குடைந்து அங்கே நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய பாஜக அரசு முயல்கிறது. இது குறித்து பூவுலகின் நண்பர்கள் தொடுத்த வழக்கில் நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு அனுமதி அளிக்க இயலாது என்று தமிழக அரசு தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன்.

இந்த திட்டத்தின் அமைவிடமான மதிகெட்டான் மற்றும் பெரியார் புலிகள் காப்பகம், புலிகள் இடம் பெயர்வு பாதையில் அமைந்துள்ளதால் காட்டுயிர் வாரிய அனுமதி வழங்க முடியாது என வனத்துறை அதிகாரிகளும் பரிந்துரை செய்துள்ளனர். உலக அளவில் உயிர் பன்மை முக்கியத்துவம் வாய்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள புலிகள் வசிக்கக்கூடிய மேகமலை, திருவில்லிப்புத்தூர் புலிகள் சரணாலயம் ஆகியவற்றைக் கம்பம் பள்ளத்தாக்குடன் இணைக்கும் முக்கிய பகுதியாக இது விளங்குகிறது. புலிகள் மட்டுமல்லாமல் பல்வேறு உயிரினங்களின் இனப்பெருக்க பரவலுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் இருக்கிறது.

இந்த மலையில் சிறிய அளவில் மனித செயல்பாடுகளால் அதிர்வுகள் ஏற்பட்டால் இப்பகுதியைப் புலிகள் மற்றும் வன உயிரினங்கள் தவிர்க்கக் கூடிய அபாயகரமான சூழல் ஏற்பட்டுவிடும். வெடிமருந்து வைத்து பாறைகளை உடைப்பதால் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடுக்கி அணையிலும் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையிலும் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிலம், நீர், காற்று மண்டலத்திற்கு பெரும் தீங்கு ஏற்படும். விவசாயிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். அந்தப் பகுதியில் வசிக்கும் மனிதர்களுக்கு சுவாச நோய்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

மேலும், இந்த சுரங்கங்களில் அணுக் கழிவுகளைக் கொட்டுவதற்குத் திட்டமிட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. முதலில் இந்த திட்டம் அசாம் மாநிலத்திலும் பின்னர் நீலகிரி மாவட்டத்திலும் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மக்களின் தொடர் எதிர்ப்பால் அம்முயற்சிகள் கைவிடப்பட்டு இப்போது தேவாரம் பொட்டிபுரத்தில் அமைப்பதற்கு ஒன்றிய அரசு முடிவு எடுத்துள்ளது. தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அமெரிக்க அரசாங்கத்தை திருப்திப்படுத்துவதற்காக மத்திய அரசின் பிரதமர் மோடி இத்திட்டத்திற்கு 1,500 கோடி ரூபாய் ஒதுக்க அனுமதி வழங்கியுள்ளார்.

உலகின் பழமையான வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக ஐ.நா மன்றம் அறிவித்துள்ள இம்மலைத் தொடரில் எந்த சேதத்தையும் ஏற்படுத்தக் கூடாது என்பது யுனெஸ்கோவின் விதி. தமிழகத்திற்கு கேடு விளைவிக்கும் நியூட்ரினோ திட்டத்திற்கு இடமளிப்பதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஹைட்ரோகார்பன் திட்டத்தின் பாதிப்புகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு, நெகிழியை ஒழிக்க மீண்டும் மஞ்சப்பை இயக்கம், நியூட்ரினோவிற்கு அனுமதி மறுப்பு என்று முதல்வர் எடுக்கும் சூழலியல் சார்ந்த முன்னெடுப்புகளுக்கு மனிதநேய மக்கள் கட்சி என்றென்றும் துணை நிற்கும்" என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x