Published : 16 Feb 2022 01:46 PM
Last Updated : 16 Feb 2022 01:46 PM

தென் மாவட்ட பயணியர் ரயில்களை முன்பு போல இயக்க அனுமதிக்க வேண்டும்: சரத்குமார்

கோப்புப் படம்

சென்னை: ’மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் தென் மாவட்ட பயணியர் ரயில்களை மீண்டும் இயக்க அனுமதிக்க வேண்டும்’ என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் நிறுவனத் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு, சென்னை புறநகர் ரயில்கள் அனைத்தும் இயக்கப்படும் நிலையில், தென் மாவட்ட பயணியர் ரயில்கள் முன்பு போல இயக்கப்படாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

நெல்லை - திருச்செந்தூர், நெல்லை - செங்கோட்டை, நெல்லை - தூத்துக்குடி, மதுரை - செங்கோட்டை, மதுரை–ராமேஸ்வரம், மதுரை - திண்டுக்கல் உள்ளிட்ட அனைத்து தென் மாவட்ட பயணியர் ரயில்களும் முழுமையாக இயக்கப்படாமல் இருப்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். பயணியர் ரயில்கள் இயக்கப்படாமல் இருப்பதால் பணிக்கு செல்வோரும், பொதுமக்களும் கடும் சிரமம் அடைவதை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் தென் மாவட்ட பயணியர் ரயில்களை முன்பு போல இயக்க அனுமதிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், தென் மாவட்ட ரயில்கள் சென்னை வரும் போது சென்னையின் முக்கிய ரயில் நிலையமான மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. ஆனால், சென்னையிலிருந்து, தென் மாவட்டங்களுக்கு புறப்படும் விரைவு ரயில்கள், சிறப்பு ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை.

சென்னை பெருநகர விரிவாக்கத்தால், சாலை மார்க்கமான பயணங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை தவிர்த்து, மக்களின் பொருளாதார நிலைக்கேற்ற வசதியான பயணமாக வெளியூர் பயணம் அமைவதற்கு, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்" என்று சரத்குமார் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x