Published : 22 Apr 2016 07:51 AM
Last Updated : 22 Apr 2016 07:51 AM

மதுரை ஆதீனத்தின் அடுத்த வாரிசு நியமனம்: பிள்ளையார்பட்டியைச் சேர்ந்தவர்

மதுரை ஆதீன மடத்துக்கு வை.திருநாவுக்கரசு என்பவரை இளைய ஆதீனமாக ஆதீனம் அருணகிரிநாதர் நியமித்துள்ளார்.

திருஞானசம்பந்தர் தோற்று வித்த மதுரை ஆதீன மடம் 1,500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. தற்போது ஆதீனமாக இருப்பவர் 292-வது ஆதீனமான அருணகிரிநாதர். இவர், தற்போது மதுரை ஆதீன மடத்தின் இளவரசராக வை.திருநாவுக்கரசை தற்போது நியமித்துள்ளார்.

இளைய ஆதீனம் வை.திருநாவுக்கரசை அறிமுகப் படுத்தி மதுரை ஆதீனம் கூறியதாவது:

வை.திருநாவுக்கரசு சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியைச் சேர்ந்த எஸ்.பி.வைத்தியநாதன், இந்திரா ஆகியோரின் 6-வது மகன். இவர் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் ஐந்து கோயில் தேவஸ்தானத்தில் பேஷ்காராகத் தொண்டு செய்து பின்னர் பிள்ளையார்பட்டி கோயில் கிராமக் கணக்குப் பிள்ளையாக பணிபுரிந்தவர்.

இவர்கள் குடும்பம் பாரம்பரியமிக்க சிவ குடும்பமாகும். இளையவராகப் பொறுப்பேற்று உள்ள வை. திருநாவுக்கரசு, தருமை ஆதீனத் திருமடத்தின் கல்லூரியில் தமிழ்த் துறையில் இளங்கலை பட்டமும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சொற்பொழிவாற்றும் திறமையும், சிறந்த எழுத்து திறமையும் மிக்கவர். தற்போது இளைய ஆதீனமாக பொறுப்பேற்று உள்ள வை.திருநாவுக்கரசு மதுரை ஆதீனத்தின் அடுத்த ஆதீனமாவார் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x