Published : 11 Feb 2022 08:17 AM
Last Updated : 11 Feb 2022 08:17 AM

இரண்டு வயது சிறுவனின் வாயில் குத்திய கம்பியை அகற்றிய அரசு மருத்துவர்கள்

சென்னை: இரண்டு வயது சிறுவனின் வாயில் குத்தி, முதுகுப்புறமாக வெளிவந்த இரும்புக் கம்பியை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் அறுவைகிச்சை மூலம் அகற்றினர். செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரத்தைச் சேர்ந்தவர் குழந்தையேசு. இவரது மனைவி செலின். இவர்களது 2 வயது மகன் ஆல்வின் ஆன்டோ. இவர்கள் வீட்டருகே கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 7-ம் தேதி மாலை குழந்தை ஆல்வின் கட்டிடப் பணி நடந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அங்கு கட்டப்பட்டு வந்த தண்ணீர்த் தொட்டியில் குழந்தை ஆல்வின் எதிர்பாராதவிதமாக விழுந்துள்ளான்.

தண்ணீர்த் தொட்டியில் தலைகுப்புற விழுந்ததால், அதிலிருந்த கான்கிரீட் கம்பி குழந்தையின் வாய் வழியே குத்தி, முதுகுப்புறமாக வெளியே வந்தது. குழந்தையின் அலறல் சப்தம் கேட்டு வந்த பெற்றோர், கம்பியுடன் சேர்த்து, குழந்தையை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துமனையில் சேர்த்தனர். அறுவைசிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் வேல்முருகன் தலைமையில், டாக்டர்கள் சீனிவாசன், நிர்மல்குமார் உள்ளிட்டோர் அறுவைசிகிச்சை செய்து, குழந்தையின் வாய் பகுதியில் குத்தி, மறுபக்கம் வெளிவந்த கம்பியை அகற்றினர்.

இதுகுறித்து டாக்டர் வேல் முருகன் கூறும்போது, “குழந்தையின் வாயில் குத்திய கம்பி 59 செ.மீ. நீளம் உடையது. மேலும், கம்பி குத்திய பகுதி குழந்தையின் சுவாசக்குழல், மூளை ரத்தகுழாய், நரம்பு மண்டலம் அருகே அமைந்துள்ளது. குழந்தைக்கு எவ்விதப் பாதிப்பும் இன்றி, பாதுகாப்பான முறையில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையைக் காப்பாற்றி உள்ளோம்’’ என்றார். அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு, குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய டாக்டர்கள் குழுவை மருத்துவமனை இயக்குநர் எழிலரசி பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x