Published : 10 Feb 2022 06:32 AM
Last Updated : 10 Feb 2022 06:32 AM

காதலர் தினத்துக்கு 1 கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி: நல்ல விலை கிடைப்பதால் ஓசூர் மலர் விவசாயிகள் மகிழ்ச்சி

ஓசூரில் பசுமைக்குடிலில் சாகுபடி செய்யப்பட்டுள்ள ரோஜா மலர்கள்

ஓசூர்

காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூரிலிருந்து ரோஜா ஏற்றுமதி தொடங்கியது. நடப்பாண்டில் 1 கோடி முதல் 1.50 கோடி வரை ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது. சர்வதேச சந்தையில் ரோஜாவுக்கு நல்ல விலை கிடைக்கிறது என்று மலர் உற்பத்தி விவசாயி கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஓசூர், தளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை ஆகிய ஒன்றியங்களில் நடப்பாண்டில் பெய்த மழை மற்றும் சாதகமான தட்பவெட்பநிலை காரணமாக ரோஜா உற்பத்தி அதிகரித்துள்ளது. இங்கு ஆண்டுக்கு சுமார் 3 கோடி முதல் 4 கோடி வரை ரோஜா மலர்கள் உற்பத்தி செய்யப் படுகிறது. இவற்றில் 75 சதவீதம் ரோஜா மலர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதலர் தினம் ஆகிய விழாக்காலங்களில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, கொல்கத்தா, மும்பை, டெல்லி உள்ளிட்ட உள்நாட்டிலும் மற்றும் ஐரோப்பா, ஆஸ்திரேலியா,அரபுநாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு 1 கோடி முதல் 2 கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதுகுறித்து தளியில் பசுமைக்குடில் அமைத்து ரோஜா உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சீனிவாசன் கூறுகையில், ஓசூர் ரோஜா மலர்களுக்கு சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்றுமதி தொடங்கி உள்ளது. நாளை (11-ம் தேதி) வரை ஏற்றுமதி நடைபெறும்.

நடப்பாண்டில் 1 கோடி முதல் 1.50 கோடி வரை ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது. நடப்பாண்டு ரோஜா மலர்களின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஒரு கட்டு தாஜ்மஹால் (சிவப்பு) ரோஜா (40 செ.மீ. நீளமான காம்புடைய 20 மலர்கள்) விலை ரூ.300-லிருந்து ரூ.500 ஆகவும், 50 செ.மீ. முதல் 60 செ.மீ. வரை நீளமான காம்புடைய ரோஜா மலர்கள் ரூ.400-லிருந்து ரூ.700 ஆகவும் விலை அதிகரித்துள்ளது. இதனால் மலர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மழை, தட்பவெப்பம்

இதுகுறித்து தளி தோட்டக்கலை உதவி இயக்குநர் சுப்பிரமணியன் கூறுகையில், ஓசூர் பகுதிகளில் பசுமைக்குடில் அமைத்து மொத்தம் 30 வகையான ரோஜா மலர்கள் பயிரிடப்படுகின்றன. கடந்த ஆண்டு நல்லமழை, சாதகமான தட்பவெட்பம் காரணமாக ரோஜா உற்பத்தி இருமடங்கு அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் சர்வதேச சந்தையில் ஒரு கட்டு ரோஜா மலருக்கு ரூ.500 முதல் ரூ.600 வரை நல்ல விலை கிடைத்துள்ளதால் மலர் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x