Published : 29 Jun 2014 10:24 AM
Last Updated : 29 Jun 2014 10:24 AM

அரசு அங்கீகாரம் பெறாத ஆசிரமத்துக்கு ‘சீல்’: 33 சிறுவர், சிறுமியர்கள் மீட்பு

சென்னையில் அரசு அங்கீகாரம் பெறாமல் இயங்கி வந்த ஆசிரமத்திற்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. அதிலிருந்த 33 சிறுவர் சிறுமியர்கள் மீட்கப்பட்டனர்.

மேடவாக்கம் ரங்கநாதபுரம் ராஜாராம் தெருவில் சிறுவர் சிறுமியருக்கான ஆசிரமம் ஒன்று இயங்கி வந்தது. இந்த ஆசிரமத்தை வில்சன்(40) என்பவர் நடத்தி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஆசிரமத்தில் இருந்த 4 சிறுவர்களைக் காணவில்லை என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்குப் புகார் வந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டார். இதற்காக மாவட்டக் குழந்தைகள் நலக் குழும உறுப்பினர் சகீர் உதின் முகமது, மருத்துவர் ரேணுகா, சமூக நல அலுவலர் சற்குணா, சோழிங்கநல்லூர் தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோரைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் விடுதி நிறுவனர் வில்சனுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

இந்த நோட்டீஸுக்கு வில்சன் எந்த பதிலையும் தரவில்லை. மேலும் அந்த ஆசிரமம் அரசு அங்கீகாரம் இல்லாமல் நடத்தப்பட்டதும், அங் குள்ள சிறுவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததும் விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து சனிக்கிழமை அந்த ஆசிரமத்துக்கு சென்ற அதிகாரிகள் 19 சிறுவர்கள், 14 சிறுமியர்களை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்தனர். முறைகேடாக இயங்கி வந்த ஆசிரமத்துக்கும் ‘சீல்’ வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x