Published : 06 Feb 2022 09:25 AM
Last Updated : 06 Feb 2022 09:25 AM

ராமநாதபுரத்தில் திமுக - அதிமுகவினர் மோதல்: நகராட்சி அலுவலக கண்ணாடி உடைப்பு

ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் திமுக - அதிமுகவினரிடையே ஏற்பட்ட மோதலின்போது சேதமடைந்த கதவின் கண்ணாடி. படம்: எல்.பாலச்சந்தர்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகராட்சியில் நடந்த வேட்புமனு பரிசீலனையின் போது திமுக மற்றும் அதிமுகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு அலுவலக கண்ணாடி உடைக்கப் பட்டது.

ராமநாதபுரம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் போட்டியிட 197 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் அதிகபட்சமாக 16-வது வார்டில் 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. குறைந்தபட்சமாக 7-வது வார்டில் திமுக வேட்பாளர் பிரவீன் தங்கம், அதிமுக வேட்பாளர் சோமசுந்தர பாண்டியன் ஆகிய 2 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரா தலைமையில் நேற்று வேட்புமனு பரிசீலனை நடந்தது. பிற்பகலில் 7-வது வார்டில் தாக்கல் செய்திருந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது அதிமுக வேட்பாளர் சோமசுந்தரபாண்டியன் தாக்கல் செய்திருந்த மனுவில் எழுத்துப் பிழைகள் இருப்பதாகக் கூறி, அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என திமுக வேட்பாளர் பிரவீன் தங்கம் தெரிவித்தார். இதையேற்று அதிமுக வேட்பாளரின் மனுவை தேர்தல் அலுவலர் தள்ளுபடி செய்தார். இதையடுத்து திமுக வேட்பாளர் பிரவீன் தங்கம் போட்டியின்றி வெற்றிபெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அதிமுக நிர்வாகிகள் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். இதைத்தொடர்ந்து திமுக நிர்வாகிகளும் நகராட்சி அலுவலகத்துக்குள் புகுந்தனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் தேர்தல் நடத்தும் அலுவலரின் அறை கதவு கண்ணாடி உடைக்கப்பட்டது.

அங்கிருந்த போலீஸார் இரு தரப்பினரையும் வெளியேற்றினர். கூடுதல் பாதுகாப்புக்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x