Published : 05 Feb 2022 06:51 PM
Last Updated : 05 Feb 2022 06:51 PM

சமூக நீதிக் கூட்டமைப்பில் அதிமுக இணையாது: ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் அடுக்கிய காரணங்கள்

சென்னை: "அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள சமூக நீதிக் கூட்டமைப்பில் அதிமுக தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பவில்லை" என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்: "தங்களின் 02.02.2022 நாளிட்டக் கடிதம் கிடைக்கப் பெற்றது. அந்தக் கடிதத்தில், கூட்டாட்சி மற்றும் சமூக நீதிக் கோட்பாடுகளை வென்றெடுக்க ஒத்தக் கருத்துள்ள அனைவரையும் ஒரு குடையின்கீழ் ஒருங்கிணைக்க அனைத்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பு தொடங்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்து, அந்தக் கூட்டமைப்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பிரதிநிதியை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளீர்கள். ஓர் அமைப்பை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒத்தக் கருத்துக்களை உடையவர்களை அழைத்துப் பேசி, அதுகுறித்து விவாதிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் தாங்களே ஓர் அமைப்பை ஏற்படுத்திவிட்டு, அதில் பிரதிநிதியை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுப்பதே கூட்டாட்சித் தத்துவத்திற்கு முரணாக உள்ளது என்பதை தங்களுக்கு முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

கூட்டாட்சி, சமூகநீதி என்றாலே மக்களின் நினைவிற்கு உடனடியாக வருவது அதிமுகவும், மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவும்தான் என்பதை இந்தத் தருணத்தில் எடுத்துக்கூற கடமைப்பட்டிருக்கிறேன். தமிழகத்தில் இன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் கல்வியிலும், அரசுப் பணிகளில் வேலைவாய்ப்பினை பெறுவதிலும் அதிகப் பயன் பெற்று வருகின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் 1980-ஆம் ஆண்டு எம்ஜிஆருடைய ஆட்சிக் காலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 31 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டதுதான். இது சமூக நீதிக்கான முதல் எடுத்துக்காட்டு. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீடு அம்மக்கள் தொகையின் அடிப்படையில் 52 விழுக்காடு இருக்க வேண்டுமென மண்டல் குழு பிரதானமாக பரிந்துரைத்தும், மத்திய அரசு அலுவலகங்களிலும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களிலும் 27 விழுக்காடு இடஒதுக்கீடு மட்டுமே வழங்க 1990 ஆம் ஆண்டு அப்போதைய மத்திய அரசு உத்தரவிட்டது. இதனைப் பாராட்டி 21-08-1990 அன்று திமுக ஆட்சிக் காலத்தில் தமிழக சட்டமன்றப் பேரவையில் ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மண்டல் குழுவின் முக்கியப் பரிந்துரையான 52 விழுக்காடு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும், கல்வியிலும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வற்புறுத்தியதோடு, மண்டல் குழுவின் பரிந்துரையை முழுமையாக ஏற்காத மத்திய அரசை கண்டித்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இது சமூக நீதிக்கான இரண்டாவது எடுத்துக்காட்டு.

1931 ஆம் ஆண்டைய கணக்கெடுப்புப்படி தமிழகத்தின் மொத்த மக்கட்தொகையில் பிற்படுத்தப்பட்ட மக்கள் 67 விழுக்காடாக இருப்பதால், இதர பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை 27 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்த வேண்டுமென்று கருதிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தின் முதல்வராக முதன் முறையாக பொறுப்பேற்ற பிறகு, 30-09-1991 அன்று மத்திய அரசு, மத்திய அரசுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் வேலைவாய்ப்புகளிலும், கல்வி நிலையங்கள் அனுமதியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்ய வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் இயற்றினார்கள். இது சமூக நீதிக்கான மூன்றாவது எடுத்துக்காட்டு.

தமிழகத்தில் 30 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும், ஒரு விழுக்காடு பழங்குடியினருக்கும் என மொத்தம் 69 விழுக்காடு இடஒதுக்கீடு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்பற்றப்பட்டு வந்த நிலையில், மண்டல் குழு பரிந்துரைகள் தொடர்பான வழக்கினை விசாரித்த ஒன்பது நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசனப் பிரிவு, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து முன்னேறிய பிரிவினரை நீக்க வேண்டுமென்றும், மொத்த இடஒதுக்கீடு 50 விழுக்காடு உச்சவரம்பை மீறக்கூடாது என்றும் தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினால் தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு பங்கம் ஏற்பட்டுவிடும் என்பதை உணர்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அதிலிருந்து மீள்வதற்காக 04-11-1993 அன்று அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தார். அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க தமிழக அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையை உறுதி செய்திட இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருமாறு மத்திய அரசை வலியுறுத்தக் கோரும் தீர்மானத்தை 09-11-1993 அன்று தமிழக சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றினார். இன்னும் சொல்லப்போனால்,பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் அமைக்கப்பட்டதே ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக் காலத்தில்தான். இது சமூக நீதிக்கான நான்காவது எடுத்துக்காட்டு.

இதனைத் தொடர்ந்து, 1993-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர்கள் (கல்வி நிலையங்களில் இடங்களையும், அரசின்கீழ் வருகின்ற பணிகளில் நியமனங்கள் அல்லது பதவிகளையும் ஒதுக்கீடு செய்தல்) சட்டமுன்வடிவை 30-12-1993 அன்று தமிழக சட்டமன்றப் பேரவையில் அறிமுகம் செய்து 31-12-1993 அன்று ஒருமனதாக நிறைவேற்றியதோடு, இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் வரிசை எண் 257A-ல் மேற்படி சட்டத்தை சேர்த்து, 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பு பெற்றுத் தந்தவர் ஜெயலலிதா. இது சமூக நீதிக்கான ஐந்தாவது எடுத்துக்காட்டு. இதற்காகத்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு 'சமூகநீதி காத்த வீராங்கனை" என்ற பட்டம் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியால் வழங்கப்பட்டது என்பதை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இன்றைக்கு தமிழகத்தில் சமூகநீதி பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு முழு முதற்க் காரணம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் என்பது மறுக்க முடியாத உண்மை.

நீட் தேர்வு காரணமாக மருத்துவப் படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கென 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டினை கொண்டுவந்து சமூக நீதியை நிலை நாட்டிய அரசு அதிமுக அரசு. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வகுத்துக் கொடுத்த பாதையில் பயணித்துவரும் அதிமுக, அகில இந்திய ஒதுக்கீட்டின்கீழ் வரும் மருத்துவச் சேர்க்கைகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்காததை எதிர்த்து தமிழக அரசின் சார்பிலும், அதிமுக சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததோடு வலுவான வாதங்களை முன்வைத்தது. இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்தப் பிரச்சினை குறித்து முடிவு செய்ய ஒரு குழுவினை அமைக்குமாறு 27-07-2020 அன்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதுதான் வெற்றிக்கு அடித்தளம். இதன் தொடர்ச்சியாக, குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரையின் அடிப்படையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் 29-7-2021 அன்று வெளியிட்ட அறிவிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டின்கீழ் நிரப்பப்படும் 15 விழுக்காடு இளநிலை மருத்துவப் பட்டப் படிப்பிற்கும், 50 விழுக்காடு முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பிற்கும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படும் என்று உத்தரவிட்டது.

இதற்கு அதிமுகவின் தொடர் வலியுறுத்தல்தான் முக்கிய காரணம். சமூக நீதியில்தான் இப்படி என்றால், கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்துவதிலும் திமுக பெரிதாக ஒன்றும் செய்திடவில்லை. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்படும் போதெல்லாம், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுப்பவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், அதிமுகவும்தான். ஆனால், 17 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த திமுக அதுகுறித்து வாய் திறக்கவில்லை என்பதுதான் யதார்த்தம்.

திமுக மத்திய அரசில் அங்கம் வகித்தபோதுதான், மாநிலங்களுக்கு இடையேயான வரிப் பகிர்வில் மேல்வரி (Surcharge and cess) கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்பதற்கு வழிவகை செய்யும் 2000-வது ஆண்டு 80-வது அரசமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இன்றைக்கு ஆட்சியில் இல்லாத சூழ்நிலையில், மேல்வரி குறித்து திமுக விமர்சனம் செய்கிறது. இதேபோன்று, திமுக மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த 17 ஆண்டுகளில்தான் தமிழ்நாட்டிற்கான மத்திய வரிப் பகிர்வு 6.637 விழுக்காட்டிலிருந்து 5.385, 5.305, 4.969 என குறைந்து கொண்டே வந்தது. இதுகுறித்து திமுக மத்திய அரசை ஏதாவது கேள்வி கேட்டிருக்குமா என்றால் இல்லை. தமிழகத்திற்காக மத்திய அரசிடம் திமுக எதையும் வலியுறுத்திக் கேட்டதாகத் தெரியவில்லை. அப்படிக் கேட்டிருந்தால் 'நீட்' என்ற வார்த்தையையே மக்கள் கேட்டிருக்கமாட்டார்கள் என்பதுதான் என் கருத்து.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2001 முதல் 2006 வரை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த காலகட்டத்தில் பல திட்டங்களை கொண்டுவர முயற்சித்தபோது, மத்திய அரசில் அங்கம் வகித்துக் கொண்டு திமுக அதை முடக்கிய நிகழ்வுகளும் உண்டு. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் பைக்காரா புனல் மின் திட்டத்தை சொல்லலாம். ஆனால், சட்டப் போராட்டம் நடத்தி அதனைச் செயல்படுத்திக் காட்டியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா .

பொதுமக்களின் நன்மையைக் கருதி, கேபிள் டி.வி. தொழிலில் உள்ள ஏகபோக உரிமையைத் தடுத்திடும் நோக்கில் தமிழக சட்டமன்றப் பேரவையில் 27-01-2006 அன்று நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு கம்பிவடத் தொலைக்காட்சி இணைப்பமைவு (பன்முகச் சேவை ஒளியிழைச் செய்திப் பரிமாற்றம் உள்ளடங்கலான) மேலாண்மையைக் கையகப்பபத்துதல், சொத்து உரிமை மாற்றம், அதனை மேற்கொள்வதற்கான சட்டமுன்வடிவை தன்னலத்திற்காக அப்போதைய மேதகு ஆளுநரிடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்திய இயக்கம் திமுக என்பதை இந்தத் தருணத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அணைப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு, நீட் தேர்வு, தீவிரவாதத்திற்கு எதிரான தேசிய மையம் அமைப்பது, மதிப்புக் கூட்டு வரி, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி, மத்திய அரசு திட்டங்களில் பயனாளிகளுக்கு நேரடியாக வங்கிமூலம் பணம் செலுத்தும் முறை, எல்லைப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர முயன்றது என பல தமிழகத்துக்கு எதிரானவற்றை, மாநில சுயாட்சிக்கு எதிரானவற்றை திமுக அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் ஆட்சி மேற்கொண்டபோது அவற்றிற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள். ஆனால், தமிழகத்துக்கு ஆதரவாக, மாநில சுயாட்சிக்கு ஆதரவாக திமுக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை என்பதோடு மத்திய அரசுக்கு தனது ஆதரவினை தொடர்ந்து அளித்து வந்தது என்பதை இந்தத் தருணத்தில் நான் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

1974 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோதுதான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமே என்பதற்காக மென்மையான தொனியில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே தவிர இதனைக் கண்டித்து மிகப் பெரிய போராட்டதை தி.மு.க. நடத்தவில்லை என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமை. கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதை எதிர்த்து ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதில் தமிழக அரசு எதிர்வாதியாக சேர்க்கப்பட்டு இருந்தது. அப்போது தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது திமுக

தமிழகத்துக்கு ஆதரவாக பதில் அளித்ததா என்றால் இல்லை. மாறாக, மத்திய அரசு எதிர் உறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட்ட பின் அதையே பின்பற்றலாமா அல்லது நம்முடைய நிலைப்பாடு பற்றி உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கலாமா என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று இதற்கான கோப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு 14-08-2009 அன்று அப்போதைய முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். அதாவது, கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லத்தக்கது என்பதே திமுகவின் நிலைப்பாடு என்பதை நான் உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

காவேரி நதிநீர்ப் பிரச்சனை என்று எடுத்துக் கொண்டாலும், 1970 ஆம் ஆண்டில் கர்நாடகம் ஹேமாவதி அணையைக் கட்டிக் கொள்வதில் தமிழ்நாட்டிற்கு ஆட்சேபணை ஏதுமில்லை என்று தெரிவித்தது, 1971 ஆம் ஆண்டில் காவேரி நதிநீர்ப் பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்துவிட்டு பின் அதனை அமைதியாக திரும்பப் பெற்றுக் கொண்டது, 1974 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியது, காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டும் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்துக் கொண்டு அதை மத்திய அரசிதழில் வெளியிட அழுத்தம் கொடுக்காதது என பல தவறுகளை தெரிந்தே செய்தது தி.மு.க. பின்னர் ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தார்கள். பின் காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நதிநீர் ஒழுங்குபடுத்தும் குழு ஆகியவை அமைக்கப்பட்டன. இதேபோன்று முல்லைப் பெரியாறு அணை குறித்த வழக்கிலும் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த திமுக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.

மத்திய அரசில் 17 ஆண்டு காலம் அங்கம் வகித்தபோது சமூக நீதிக்காகவோ அல்லது மாநில சுயாட்சிக்காகவோ குரல் கொடுக்காமல் இருந்துவிட்டு, தற்போது மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்காத தருணத்தில் அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பை உருவாக்கி, அதில் அதிமுகவின் சார்பில் ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்று கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

சமூக நீதி குறித்தோ அல்லது மாநில சுயாட்சி குறித்தோ அல்லது கூட்டாட்சி தத்துவம் குறித்தோ பேசுவதற்கான தார்மீக உரிமை அதிமுகவுக்கு மட்டுமே உண்டு என்பதைத் தங்களுக்கு அழுத்தந்திருத்தமாக இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.

தமிழகத்தின் நலத்திற்காக, தமிழக மக்களின் நலத்திற்காக குரல் கொடுக்க அதிமுக தயங்காது. தாங்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் தமிழகத்தின் நலன், தமிழக மக்களின் நலன் ஏதாவது இருக்கிறதா என்று துருவித் துருவிப் பார்த்தபோது, அதுபோன்ற எதுவும் இல்லை என்பதும், அரசியல் ஆதாயம்தான் மேலோங்கி இருக்கிறது என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

தற்போது திமுக ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசை திருப்பவே அனைத்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பு என்ற அமைப்பு தங்களால் உருவாக்கப்பட்டுள்ளதாக அனைவரும் கருதுகிறார்கள். அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பில் அதிமுக தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பவில்லை என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் நேரத்தை வீணடிப்பதை தவிர்த்து, 'நீட் தேர்வு ரத்து' போன்ற மக்கள் நலம் சார்ந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டுமென்று தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x