Last Updated : 04 Feb, 2022 01:29 PM

 

Published : 04 Feb 2022 01:29 PM
Last Updated : 04 Feb 2022 01:29 PM

கழிப்பறை சுற்றுச்சுவர் விழுந்து 3 மாணவர்கள் பலியான சம்பவம்: நெல்லை பள்ளி தாளாளர், முதல்வர் மீதான வழக்கு ரத்து

மதுரை: நெல்லையில் பள்ளி கழிப்பறை சுற்றுச்சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்தது சம்பவம் தொடர்பாக பள்ளியின் தாளாளர், முதல்வர் ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி எஸ்.என்.ஹைரோட்டில் மாநகராட்சி அலுவலகத்தையொட்டி143 ஆண்டுகள் பழமையான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் 17.12.2021-ல் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி மாணவர்கள் அன்பழகன், விஸ்வரஞ்சன், சுதீஸ் ஆகிய 3 மாணவர்களும் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் செல்வகுமார், தலைமையாசிரியை ஞானசெல்வி, காண்ட்ராக்டர் ஜான்கென்னடி ஆகியோரை நெல்லை டவுன் போலீஸார் கைது செய்தனர்.இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளி தாளாளர் செல்வக்குமார், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அதில், கழிப்பறை சுவர் 2007-ல் கட்டப்பட்டது. 14 ஆண்டுக்கு பிறகு இடிந்து விழுந்துள்ளது. அந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. மழையால் கழிப்பறை சுற்றுச்சுவர் இடிந்துள்ளது. நான் 3 மாதங்களுக்கு முன்பு தான் தளாளார் பணியில் சேர்ந்தேன். இதனால் என்னை வழக்கில் சேர்த்தது தவறு.

இந்த வழக்கால் எனக்கு களங்கம் ஏற்படும். எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார். இதேபோல் பள்ளி தலைமை ஆசிரியை பெர்சிஸ் ஞானசெல்வியும் வழக்கை ரத்து செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த இரண்டு மனுக்களும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பள்ளியில் இடிந்து விழுந்த கழிப்பறை சுவர் பல ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. மனுதாரர்கள் சில மாதங்களுக்கு முன்பு தான் பணியில் சேர்ந்துள்ளனர். இதனால் சம்பவத்துக்கு மனுதாரர்களை பொறுப்பாக்க முடியாது. எனவே இருவர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. ஒப்பந்ததாரர் மீதான வழக்கை போலீஸார் தொடரலாம் என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x