Published : 03 Feb 2022 01:00 PM
Last Updated : 03 Feb 2022 01:00 PM

ஆளுங்கட்சியை நம்பினால் பேரிடர்தான்... நல்லவர்களையே மக்கள் நாடவேண்டும்: டிடிவி தினகரன்

சென்னை: "ஆளுங்கட்சியாக இருக்கிறார்கள் என்று திமுகவை மக்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனுமதித்தால், அது மிகப்பெரிய பேரிடரில்தான் முடியும்" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பண மூட்டையோடு அலைகின்ற கட்சிகள், பணத்தைக் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கலாம் என அலைவார்கள். ஏற்கெனவே திமுக ஆட்சி, வந்தா என்ன நடக்கும் என்று நன்றாகத் தெரியும், அதனால் ஆரம்பித்துவிட்டார்கள், அவர்களுடைய வேலைகளை. இப்போது ஒவ்வொரு பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என வார்டு வாரியாக திமுகவை வெற்றி பெற மக்கள் அனுமதித்தார்கள் என்றால், ஆளுங்கட்சியாக இருக்கிறார்கள் என்று மக்கள் அவர்களை அனுமதித்தார்கள் என்றால், இது மிகப்பெரிய பேரிடரில்தான் முடியும் என்பதை மக்கள் உணர்ந்து இந்தத் தேர்தலில் மக்கள் நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். மக்களுக்காக உழைக்கக்கூடியவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

பொதுமக்களின் சொத்துகள், அரசின் சொத்துக்களை சுரண்டாதவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். பணத்துக்காக வாக்களிக்காமல், எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் மக்கள் நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அமமுக சார்பில் நிச்சயமாக நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்துதான் இந்தத் தேர்தலில் போட்டியிட செய்கிறோம். எனவே அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். தற்போது பல்வேறு இடங்களில் அமமுகவினர் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். வேட்புமனு பரிசீலனை உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்த பின் எத்தனை இடங்களில் போட்டியிடுகிறோம் என்பது குறித்து அறிவிக்கப்படும்.

பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எடப்பாடி பழனிசாமி குறித்து மிகவும் தாமதமாக புரிந்துகொண்டுள்ளனர். இவர்கள் முன்பே சரியாக இருந்திருந்தால், ஒரு முறைகேடான ஆட்சியை தடுத்திருக்கலாம். காமராஜர், அண்ணா காலத்திலிருந்தே தமிழகத்துக்கு ஒரு தனி இடம் இருந்து வருகிறது. ராகுல் காந்தி தன்னை தமிழர் எனக் கூறியதை வரவேற்கிறேன். ஆனால், இந்த நீட் தேர்வு வருவதற்கு காரணமாக இருந்தவர்களே காங்கிரஸ், திமுகதான். ஆட்சிக்கு வந்தவுடனே முதல் கையெழுத்து நீட் தேர்வை இல்லாமல் செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தார்கள்; அதையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x