Published : 02 Feb 2022 04:35 PM
Last Updated : 02 Feb 2022 04:35 PM

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்துக: மத்திய, மாநில அரசுகளுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

கோப்புப் படம்

சென்னை: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நூல் விலை உயர்வால் திருப்பூரில் பின்னலாடை வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் பின்னலாடை உற்பத்தியில் இந்தியாவின் மிகப்பெரும் மையமாகவும் சர்வதேச முக்கியத்துவம் பெற்ற நகரமாகவும் திருப்பூர் விளங்குகிறது. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமாக திருப்பூரில்தான் தயாராகின்றன.

ஆனால், அந்தத் தொழிலை முடக்கும் வகையில் பின்னலாடைகளின் முக்கிய மூலப்பொருளான நூலின் விலை அண்மைக் காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு ரூ.230க்கு விற்பனையான நூல் விலை கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.150 வரை உயர்ந்து சுமார் 350 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதுபோன்ற சூழலில் நூலின் விலை தற்போது மேலும் 10 ரூபாய் அதிகரித்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நூல் விலை உயர்வால் திருப்பூரில் 50 சதவீதம் சிறு, குறு பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஏற்கெனவே கரோனா தொற்று பரவலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து முழுமையாக மீளாத நிலையில், நூல் விலை உயர்வால் பின்னலாடை நிறுவனங்கள் மீண்டும் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டன. இதேநிலை நீடித்தால் ஒட்டுமொத்த ஜவுளித் துறையில் பல நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படுவதுடன் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும்.

மேலும், பஞ்சு இறக்குமதிக்கான 11 சதவீதம் வரியை நீக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அதுதொடர்பான அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் இடம்பெறாதது பின்னலாடை நிறுவனங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பஞ்சு இறக்குமதிக்கான வரியை நீக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x