Published : 02 Feb 2022 12:28 PM
Last Updated : 02 Feb 2022 12:28 PM

உயிருள்ள எலியுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கரூர் சுயேட்சை வேட்பாளர்: சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

கரூர்: கரூர் மாநகராட்சி 26-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிடும் ராஜேஸ் கண்ணன் என்பவர், கூண்டில் உயிருள்ள எலியுடன் நூதனப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம், சமூக ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இம்மாதம் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகராட்சி, குளித்தலை, பள்ளப்பட்டி, புகழூர் ஆகிய 3 நகராட்சிகள், தோட்டக்குறிச்சி, அரவக்குறிச்சி, புலியூர், உப்பிடமங்கலம், கிருஷ்ணராயபுரம், பழைய ஜெயங்கொண்டம், மருதூர், நங்கவரம் ஆகிய 8 பேரூராட்சிகளில் 246 வார்டுகள் உள்ளன.

கடந்த மாதம் 28-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், கரூர் மாநகாராட்சி 26-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிடும் ராஜேஸ்கண்ணனை வாழ்த்தி காமராஜபுரம் தமிழ் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், ’அரசியல் என்பது மக்களை வைத்து பிழைக்க அல்ல... மக்களுக்காக உழைக்க...’ என்ற முழக்கத்தோடு, ’கரூர் 26வது வார்டில் கவுன்சிலர் பணிக்கு போட்டியிடும் ராஜேஸ்கண்ணன் வெற்றி பெற வாழ்த்துகிறோம்’ என கரூர் நகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டி ஒட்டினர்.

கரூர் மாநகராட்சி 26-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிடும் ராஜேஸ்கண்ணன் கடந்த 31ம் தேதி குடும்பத்துடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். கரூர் செங்குந்தபுரம் கேவிபி நகர் ஸ்ரீஞானஸ்கந்தன் கோயிலில் இன்று (பிப்.2) சிறப்பு அர்ச்சனையுடன் வழிப்பாடு செய்து, கூண்டில் உயிருடன் உள்ள எலி மற்றும் வெறும் எலி கூண்டுடன் தனது நூதனப் பிரச்சாரத்தை தொடங்கினார்.

அவரது இரு மகன்களில் ஒருவர், உயிருள்ள எலி உள்ள கூண்டையும், மற்றொரு மகன் வெறும் கூண்டையும் எடுத்துச்சென்று வீடு, வீடாக அவரது வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரிப்பைத் தொடங்கினர். துண்டு பிரசுரத்தில், 'அரசியல் என்பது, மக்களை வைத்துப் பிழைக்க அல்ல, மக்களுக்காக உழைக்க... முத்தான பத்தே பத்து செயல் திட்டங்களோடு 26வது வார்டு முதல் திட்டமாக ஒழிப்புத் திட்டம். 1 கோடி கொசுக்கள், 1 லட்சம் கரப்பான் பூச்சிகள், 10 ஆயிரம் எலிகள்,100 தெரு நாய்கள் இவற்றை ஒழித்து சுகாதாரமான நிலை ஏற்படுத்துவேன். 2-வது திட்டத்துடன் நாளை சந்திப்போம்.. என்றும், கட்சி பேதம் ஏதுமில்லை... ராஜேஸ் உங்கள் வீட்டு பிள்ளை...' என குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்சபட்ச நம்பிக்கையாக 26-வது வார்டு கவுன்சிலர் ராஜேஸ்கண்ணன்.சு என அவரது செல்போன் எண்ணை புகைப்படத்துடன் அச்சிட்டுள்ளார். ஒழிப்புத் திட்டம் குறித்து சு.ராஜேஸ்கண்ணிடம் கேட்டப்போது, அதனை திட்ட அறிக்கையாக தயாரித்து வெளியிட உள்ளதாகவும், சின்னம் ஒதுக்கியப்பிறகு தினம் ஒரு திட்டத்தில் 2-வது திட்டத்தை வரும் 7ம் தேதி அறிவிப்பதாகவும் தெரிவித்தார். நூதன முறை பிரச்சாரம் என்ற பெயரில் கூண்டில் உயிருள்ள எலியைப் பிரச்சாரத்திற்கு எடுத்து செல்வது, அவரது 6 மற்றும் மூன்றரை வயதுள்ள 2 மகன்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியது ஆகியவை சமூக ஆர்வலர்களிடம் கடும் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x