Last Updated : 01 Feb, 2022 09:28 PM

 

Published : 01 Feb 2022 09:28 PM
Last Updated : 01 Feb 2022 09:28 PM

7 ஆண்டுகளாக வருமான வரி விலக்கு உச்சவரம்பை உயர்த்தாததால் மக்கள் பாதிப்பு: நாராயணசாமி

புதுச்சேரி: மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட் மாயாஜால பட்ஜெட். இந்த பட்ஜெட்டால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. இன்னும் பொருளாதார வீக்கம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவை ஏற்படும் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மின்துறை தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் - திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று (பிப். 1) மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியது: ‘‘2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இந்த பட்ஜெட் கார்ப்பரேட்டுகளுக்கான பட்ஜெட். கரோனா காலத்தில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல அறிவிப்புகள் மக்கள் நலனுக்காக வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றம் தான் மிச்சம். விவசாயிகளுக்கு இரட்டிப்பு தொகை கொடுப்போம் என்று சொன்னார்கள். அது கொடுக்கப்படவில்லை.

வேலைவாய்ப்பு உருவாக்குகின்ற திட்டம், விலைவாசி உயர்வை கட்டுப்டுத்துகின்ற திட்டம் என எதையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் இந்த பட்ஜெட்டில் இல்லை. சுமார் 25 லட்சம் கோடி பேர் வேலையில்லாமல் அவதிப்படும் நேரத்தில் 80 லட்சம் பேர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு கொடுக்கப்படும் என்பது வருத்தம் அளிக்கின்றது.

சுற்றுலா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சிறுகுறு தொழில் நடத்துபவர்களுக்கு ரூ.2 லட்சம் கோடி வங்கிகளில் கடன் வழங்குவதாக கூறுகின்றனர். அவர்களுக்கு கடன் தேவையில்லை. மானியம் வழங்க வேண்டும். அதேபோல், சுற்றுலாத் துறைக்கும் மானியம் வழங்க வேண்டும். ஆனால் கடன் வழங்க ரூ.5 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளனர். வங்கிகளில் யார் வேண்டுமானாலும் கடன் வாங்கலாம். அதற்கு மத்திய அரசின் தயவு தேவையில்லை. ரூ.5 லட்சம் கோடி ஒதுக்கி, வங்கியிடம் கொடுத்துவிட்டு, வங்கிகளில் இருந்து மக்கள் கடன் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

130 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் இந்த ஆண்டில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் 48 ஆயிரம் கோடி ஒதுக்கி 80 லட்சம் வீடுகள் கட்டுவது என்பது எப்படி ஏற்படுடையதாகும். ஓராண்டுக்கு 5 கோடி வீடு கட்டுங்கள். 25 ஆயிரம் கிலோ மீட்டருக்கு புதிய நான்கு வழி சாலை போடுவதாக அறிவித்துள்ளனர். அதற்கு நிதி ஒதுக்காமல் வெளிமார்க்கெட்டில் இருந்து ரூ.20 ஆயிரம் கோடி நிதி பெற்று அதந்த சாலைகள் போடப்படும் என்பது சாத்தியக்கூறான விஷயம் அல்ல. மொத்தம் இந்த பட்ஜெட் ரூ.38 லட்சம் கோடி. ரூ.27 லட்சம் கோடிதான் வருமானம். ரூ.11 லட்சம் கோடி அதாவது 35 சதவீதம் வெளிமார்க்கெட்டில் இருந்து கடன் வாங்குகின்றனர்.

கிரிஃப்டோகரன்ஸிக்கு வரி போடுகின்றனர். டிஜிட்டல் பணம் கொண்டு வருகிறோம் என்று சொல்கின்றனர். அது பிரச்சனை இல்லை. தினமும் வருமானம் பார்ப்பவர்கள், அரசு ஊழியர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வருமானம் இரண்டரை லட்சம் வரை தான் லிமிட். அதற்குமேல் போனால் வரிவிதிப்பு. இவர்களுக்கு 2014-ல் இருந்து வருமான உச்சவரம்பு அதிகப்படுத்தவில்லை. 7 ஆண்டுகளாக மோடி அரசு இதனை செய்யவில்லை. இதனால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பட்ஜெட் மாயாஜால பட்ஜெட், மக்களை ஏமாற்றும் பட்ஜெட். இந்த பட்ஜெட்டால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. இதனால் இன்னும் பொருளாதார வீக்கம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவைதான் ஏற்படும்’’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x