Published : 30 Jan 2022 06:35 PM
Last Updated : 30 Jan 2022 06:35 PM

பிரதமர் பாராட்டியதில் மகிழ்ச்சி: அரசு பள்ளிக்கு ரூ.1 லட்சம் நிதியளித்த இளநீர் வியாபாரி தாயம்மாள் நெகிழ்ச்சி

அரசு பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி அளித்த இளநீர் வியாபாரி தாயம்மாளை மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார்

அழியா சொத்தாக என்றும் நிலைத்து இருப்பது கல்வி. அத்தகைய கல்வியை அனைவருக்கும் கிடைக்க அரசு பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகிறது. இருப்பினும் அரசு பள்ளிகளின் கட்டமைப்பு உயர்த்த, மக்களும் பல்வேறு முறையில் உதவி செய்து வருகிறார்கள். அவ்வாறு சில பள்ளிகள் பொதுமக்களின் பங்களிப்பு உடன் தனியார் பள்ளிக்கு நிகராக உயர்ந்து இருப்பது வரவேற்கதக்கது.

அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளநீர் வியாபாரி தாயாம்மாள் தனது பகுதியில் உள்ள பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை கொடுத்து உதவியது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.

திருப்பூர், மாவட்டம் உடுமலை அருகே சின்னவீரம்பட்டி நடுநிலைப் பள்ளியில், எல்.கே.ஜி., முதல் 8ம் வகுப்பு வரை 650 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதனால் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் கூடுதல் கட்டிடம் எழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆகையால், கட்டிடம் எழுப்ப நிதி கோரப்பட்டிருந்தது.

இதை அறிந்த சின்னவீரம்பட்டியைச் சேர்ந்த இளநீர் விற்பனையாளர் தாயம்மாள் என்பவர் தனது சொந்த சேமிப்பில் இருந்து ஒரு லட்சம் ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார். இவரது கணவர் ஆறுமுகம் அதே பள்ளியில் பயின்றவர். இவர்களது மகன் மெய்நாதன் மற்றும் மகள் ரம்யா இருவரும் அதே பள்ளியில் பயின்றவர்கள் ஆவர். மேலும், மகள் ரம்யா தற்போது அதே பள்ளியில் அறிவொளி திட்டத்தின் கீழ் 1 ஆம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி கற்று தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இளநீர் வியாபாரி தாயம்மாள் கூறியதாவது, “ நான் பெரிய அளவில் கல்வி பயிலவில்லை. ஆகையால், கல்வியின் முக்கியத்துவம் குறித்து எனக்கு தெரிந்தது. எனது, கணவரும் 7 ஆம் வகுப்பு வரை மட்டும் பயின்றுள்ளார். அதனால், தான் இளநீர் வியாபாரத்தில் கணக்கு பார்க்க முடிகிறது. இத்தகைய முக்கியதுவம் வாய்ந்த கல்வி அனைவருக்கும் கிடைக்க என்னால் முடிந்த ஒரு உதவியாக ரூ. 1 லட்சம் அரசு பள்ளிக்கு வழங்கினேன். இதுகுறித்து, பிரதமர் மான் கீ பாத் நிகழ்ச்சியில் கூறியது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

இதனிடையே உடுமலையை சேர்ந்த தாய் மகளுடன் தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் முருகன் செல்போனில் பேசி வாழ்த்து தெரிவித்தார். ஒரே நாளில் பிரதமர் மற்றும் மத்திய இணை அமைச்சர் அவர்களுடன் உரையாற்றியது தாயம்மாள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் இடையே பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x