Published : 28 Jan 2022 07:43 AM
Last Updated : 28 Jan 2022 07:43 AM

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமமுக தனித்து போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமமுக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் கட்சியின் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டிய நிலை இருந்தாலும், மாநிலத்தில் இப்போதுதான் ஒமைக்ரான், கரோனா பரவல் குறைந்து வருகிறது. பிப்ரவரியில் தொற்று பரவல் குறைய வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். தற்போதைய நிலையில் தேர்தல் நடத்தினால், பிரச்சாரத்துக்காக அனைத்து கட்சியினரும் தெருத் தெருவாக செல்வார்கள். அதன் காரணமாக தொற்று மீண்டும் பரவுமோ என்ற அச்சம் உள்ளது. அதனால், தேர்தலை ஒரு மாதத்துக்கு பிறகு நடத்துகிறோம் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியிருக்கலாம்.

தமிழகம் முழுவதும் வேட்பாளர் தேர்வில் எங்கள் கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் ஏற்கெனவே ஈடுபட்டிருந்தனர். தற்போது அவர்கள்அந்த பட்டியலை கொடுத்துள்ளனர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் என சுமார் 12,800 வார்டுகளிலும் அமமுகவினர் தனித்து போட்டியிடுவார்கள்.

இத்தேர்தலில் ஆளுங்கட்சி முறைகேடு செய்யும் என்பது எல்லோருக்கும் தெரியும். தேர்தல் என்பது ஜனநாயக போர்க்களம். அதில், முறைகேடுகளை தாண்டி வெற்றி பெற முயற்சி செய்வோம்.

திமுகவின் உண்மை சொரூபம்வெளிப்படத் தொடங்கியுள்ளது. விடியல் அரசு என்றார்கள். இப்போது திமுகவின் விடியலுக்காக தெருத் தெருவாக வேலையை தொடங்கிவிட்டனர். பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் இருந்தே திமுகவினர் அவர்களது வேலையில் முழுவீச்சில் இறங்கிவிட்டனர். இதை மக்களும் நன்கு அறிவார்கள்.

சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து நயினார் நாகேந்திரன் கூறியது உண்மைதான். அவர் சொன்னகருத்தில் தவறு இல்லை. அவர் பயன்படுத்திய வார்த்தைகள்தான் தவறு. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x