Published : 28 Jan 2022 08:26 AM
Last Updated : 28 Jan 2022 08:26 AM

தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்: மாணவி பேசியதாக மற்றொரு வீடியோ வெளியானதால் பரபரப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில், மாணவி உயிரிழப்பதற்கு முன் பேசியதாக மற்றொரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். உயிரிழப்பதற்கு முன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அந்த மாணவிசிகிச்சை பெற்றபோது, மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலத்தில், விடுதியை சுத்தம் செய்யச் சொல்லிவார்டன் வற்புறுத்தியதாக கூறியிருந்தார். இதையடுத்து, விடுதி வார்டன் சகாயமேரி(62) கைது செய்யப்பட்டார்.

இதனிடையே அந்த மாணவி சிகிச்சை பெற்றபோது, விஎச்பி அமைப்பின் அரியலூர் மாவட்டச் செயலாளர் முத்துவேல் என்பவர்எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அதில், தன்னை கிறிஸ்தவ மதத்துக்கு மாற பள்ளி நிர்வாகம் கூறியதாக மாணவி கூறியிருந்ததால் சர்ச்சை எழுந்தது. இதைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணி உள்ளிட்டகட்சி, அமைப்புகளைச் சேர்ந்தோர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்குமாற்றக்கோரி அவரது தந்தை, உயர் நீதிமன்ற மதுரைகிளையில் மனுத் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவின்பேரில், மனுதாரரின் மகள் இறப்பதற்கு முன் பேசியதை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்த அரியலூர்மாவட்ட விஎச்பி செயலாளர் பி.முத்துவேல், வல்லம் டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி பிருந்தாமுன் ஆஜராகி செல்போனை ஒப்படைத்தார். இதையடுத்து, வீடியோவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய அந்த செல்போன் சென்னையில் உள்ள தடயவியல் ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டது.

மற்றொரு வீடியோ

இதற்கிடையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட மற்றொரு வீடியோ நேற்றுமுதல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் மாணவி பேசியது:

‘‘நான் மைக்கேல்பட்டி பள்ளியில 8-ம் வகுப்புல இருந்து படிக்கிறேன். எப்பவுமே நான்தான் பர்ஸ்ட் ரேங்க் எடுப்பேன். ஆனா,இந்த வருஷம் குடும்ப சூழ்நிலையால லேட்டாதான் பள்ளிக்கு போனேன். அதனால, போர்டிங்கில் (விடுதியில்) உள்ள சிஸ்டர் என்னை கணக்கு வழக்கு பார்க்க சொன்னாங்க. அதற்கு நான், ‘இல்லசிஸ்டர். நான் லேட்டாதானே வந்தேன். அதனால ஒன்னும் புரியல, அப்புறமா எழுதி தாரேன்னு’ சொன்னேன், அதுக்கு அவங்க, ‘பரவா இல்ல, எழுதிக் கொடுத்துட்டு உன் வேலையை பாரு’ அப்படின்னு சொல்லி என்னைய எழுத வச்சுக்கிட்டே இருப்பாங்க. நான் கரெக்டா எழுதினாலும், தப்பு தப்புன்னு சொல்லி ஒரு மணி நேரம் உட்கார வைச்சிருவாங்க. அதனால படிச்சு ஆன்ஸர்ஸ் பண்ணவே முடியல. இப்படியே போனா படிக்க முடியாதுன்னு நினைச்சுதான் விஷம் குடிச்சுட்டேன்’’ என்கிறார்.

பிறகு வீடியோ எடுத்த நபர்: அந்த சிஸ்டர் பேரு என்ன?

மாணவி: சகாயமேரி.

வீடியோ எடுத்தவர்: ஃபாதர் பேரு என்ன?

மாணவி: ஃபாதர்லாம் இல்ல.

வீடியோ எடுத்தவர்: ஸ்கூல் ஹெட்மாஸ்டர் பேரு?

மாணவி: அவங்கல்லாம் எதுவும் சொல்லல.

வீடியோ எடுத்தவர்: அவர் பேரு என்னன்னு கேட்டேன்.

மாணவி: ஆரோக்கிய மேரி.

வீடியோ எடுத்தவர்: உன்னைய வேறு எதாவது வேலை செய்யச் சொல்லுவாங்களா?

மாணவி: கேட் பூட்டச் சொல்லுவாங்க. எல்லா வேலையையும் என்னையையே செய்யச் சொல்லுவாங்க.

வீடியோ எடுத்தவர்: என்னென்னவேலை செய்வீங்க?

மாணவி: காலைல கேட் தொறக்குறதுல இருந்து, வார்டன் செய்யுற எல்லா வேலையையும் செய்யச் சொல்லுவாங்க. நீதான் பொறுப்பா இருக்குற அப்படிம்பாங்க.

வீடியோ எடுத்தவர்: ஸ்கூல்ல உன்ன பொட்டு வைக்கக் கூடாதுஅந்த மாதிரியெல்லாம் சொல்லுவாங்களா?

மாணவி: அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க.

வீடியோ எடுத்தவர்: பொங்கலுக்கு ஊருக்கு வந்தியா?

மாணவி: அப்டியெல்லாம் கேட்டா, இல்ல... நீ படிக்கணும் இங்கயே இரு, அப்படின்னு சொல்லி இருக்க வச்சுடுவாங்க.

வீடியோ எடுத்தவர்: அப்போ பொங்கலுக்குக்கூட ஊருக்கு வரலயா?

மாணவி: பொங்கலுக்கு உடம்பு சரியில்லன்னு அனுப்பி வச்சாங்க.

வீடியோ எடுத்தவர்: நீங்க மருந்து (விஷம்) சாப்பிட்டது அவங்களுக்கு தெரியுமா?

மாணவி: தெரியாது

இப்படி அந்த வீடியோவில் உரையாடல் நடந்துள்ளது.

வீடியோவை வெளியிட்டது யார்?

மாணவி சிகிச்சை பெறும்போது வீடியோ எடுத்த முத்துவேல், தன்னுடைய செல்போனை தடயவியல் ஆய்வுக்காக ஒப்படைத்த நிலையில், நேற்று மற்றொருவீடியோ வெளியாகி உள்ளதால்,அந்த வீடியோவை எடுத்தது யார்? வெளியிட்டது யார் போன்ற விவரங்கள் தெரியவில்லை.

மாணவியின் தந்தை கருத்து

இதுகுறித்து மாணவியின் தந்தையிடம் கேட்டபோது: எனதுமகளின் மற்றொரு வீடியோ வெளியானது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் பார்க்கவும் இல்லை. அதை யார் எடுத்தது எனவும் தெரியவில்லை. எனதுமகள் விடுதியிலும் சரி, விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தபோதும், நெற்றியில் பொட்டு வைக்க மாட்டார். கையில் வளையல் போட மாட்டார். இதை அப்போது நாங்கள்ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்றார்.

மாணவியின் மற்றொரு வீடியோ வெளியானது குறித்து பள்ளி தரப்பில் கேட்டதற்கு, ‘‘அந்த வீடியோவை இதுவரை நாங்கள் பார்க்கவில்லை. மாணவியின் தற்கொலை தொடர்பான வழக்கு விசாரணையில் இருப்பதால், நாங்கள் ஏதும் கருத்து தெரிவிக்க இயலாது” என்றனர்.

இந்த வீடியோ குறித்த தகவலைப் பெற முத்துவேலை தொடர்பு கொண்டபோது, அவரது செல்போன் எண் நீண்ட நேரமாக தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x