Published : 28 Jan 2022 08:01 AM
Last Updated : 28 Jan 2022 08:01 AM

செங்கை மாவட்டத்தில் 277 வார்டுகளில் நகர உள்ளாட்சித் தேர்தல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி, 4 நகராட்சிகள், 6 பேரூராட்சிகள் ஆகியவற்றில் மொத்தம் 277 வார்டுகளில் நகர உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 10,76,762 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

தாம்பரம் மாநகராட்சியில், 70 வார்டுகள் உள்ளன. 7 லட்சத்து 64 ஆயிரத்து 731 வாக்காளர்கள், மாநகராட்சி தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். நந்திவரம் நகராட்சி - 30, செங்கல்பட்டு - 33, மறைமலை நகர் - 21, மதுராந்தகம் - 24 வார்டுகள் என, 4 நகராட்சிகளில் 108 வார்டுகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. 4 நகராட்சிகளில் 2,20,413 வாக்காளர்கள் உள்ளனர்.

மாமல்லபுரம், திருப்போரூர், கருங்குழி, அச்சிறுப்பாக்கம் ஆகியபேரூராட்சிகளில் தலா 18 வார்டுகள் உள்ளன. திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் 18 வார்டுகளும், இடைக்கழி நாடு பேரூராட்சியில் 21 வார்டுகளும் உள்ளன. 6 பேரூராட்சிகளில் மொத்தம் 91,618 வாக்காளர்கள் உள்ளனர். ஆக மொத்தம் செங்கல்பட்டு மாவட்டத்தில் 277 வார்டுகளுக்கு நகர உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது.

மேயர், துணை மேயர், தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்ஆகும் கனவுடன் திமுக, அதிமுகஉள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் வலம் வருகின்றனர். கடந்த, 2011-க்குப் பிறகு, நகர உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை; 2016 தேர்தல் பாதியில் ரத்து செய்யப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு, 11 ஆண்டுகளுக்குப் பிறகு, தேர்தல் நடப்பதால், வாக்காளர்கள் இத்தேர்தல் மூலமாக, கவுன்சிலரைத் தேர்வு செய்ய உள்ளனர். பெண் வாக்காளர்களே வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் நிலையில் உள்ளனர்.

தேர்தலுக்காக 1,067 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிப்.19-ம் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற தேர்தலுக்கு இன்றுமுதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் கூட்டத்தைத் தவிர்க்க, வேட்பு மனுக்களைப் பெற்றுக்கொள்ள அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 8 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x