Published : 27 Jan 2022 06:55 AM
Last Updated : 27 Jan 2022 06:55 AM

முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டும் குடியரசு தினத்தில் தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவிக்கவில்லை: அதிகாரிகளின் அலட்சியத்தால் தொடரும் அவலம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டும் குடியரசு தினத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை, வ.உ.சிதம்பரனார் சிலை, விவேகானந்தர் இல்லம் அருகில் உள்ள அன்னி பெசன்ட் அம்மையார் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்படவில்லை. படங்கள்: ச.கார்த்திகேயன்

சென்னை: குடியரசு தினத்தன்று சுதந்திரத்துக்காக போராடிய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டும், அதிகாரிகளின் அலட்சியத்தால் குடியரசு தினமான நேற்று சென்னையில் வ.உ.சிதம்பரனார், அன்னி பெசன்ட் அம்மையார் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு ஆக. 13-ம் தேதி, `சுதந்திரம் மற்றும் குடியரசு தினவிழா நாட்களில் கேட்பாரற்று கிடக்கும் தலைவர்களின் சிலைகள்: அலங்கரித்து மரியாதை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?’ என்ற தலைப்பில் `இந்து தமிழ் திசை' நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, “நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட தலைவர்கள் மற்றும் வீரர்களின் சிலைகளுக்கு சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழா நாட்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து ஆக. 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று முதன்முறையாக பெரும்பாலான தலைவர்களின் சிலைகளுக்கு மாலைகள் அணிவித்து அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இருப்பினும் அதிகாரிகளின் அலட்சியத்தால் மெரினா கடற்கரையில் நிறுவப்பட்டுள்ள மகாகவி பாரதியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்படவில்லை.

முதல்வரின் உத்தரவை ஏற்று இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று முதன்முறையாக தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. குறிப்பாக, விழா நடைபெறும் காமராஜர் சாலையில் மெரினா கடற்கரையோரமாக நிறுவப்பட்டுள்ள பாரதியார், பாரதிதாசன் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள வ.உ.சிதம்பரனார், விவேகானந்தர் இல்லம் அருகில் நிறுவப்பட்டுள்ள அன்னி பெசன்ட் அம்மையார் ஆகியோரின் சிலைகளுக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செய்யப்படவில்லை. இச்செயல் நாட்டின் மீது பற்று கொண்ட ஏராளமானோரை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

இதுதொடர்பாக நாட்டின் மீது பற்று கொண்ட சிலர் கூறியதாவது:

நாட்டின் சுதந்திரத்துக்காக, ஆங்கிலேயரை எதிர்ப்பதற்காக தன் சொத்துகளை இழந்து, இரட்டை ஆயுள் தண்டனை பெற்று, சிறையில் ஆங்கிலேய அதிகாரிகளின் அடக்குமுறைகளுக்கு ஆளாகி, செக்கிழுக்க வைத்து, கடும் சித்ரவதைகளை அனுபவித்தவர் வ.உ.சிதம்பரனார். இவரின் சிறப்பை போற்றியே முதல்வர் ஸ்டாலின், வஉசி-யின் 150-ம் ஆண்டு பிறந்த நாள் ஆண்டாக தற்போது கொண்டாடி வருவதுடன், கடந்த சுதந்திர தின உரையில், சென்னையில் வஉசி-க்கு சிலை, தூத்துக்குடியில் முக்கிய சாலைக்கு பெயர் வைத்தல் உள்ளிட்ட 14 அறிவிப்புகளை வெளியிட்டார்.

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ராஜ பாதையில் செல்லும் தமிழக அரசின் அலங்கார ஊர்தியிலும் வஉசி-யின் சிலையை முதல்வர் ஸ்டாலின் இடம்பெறச் செய்தார். இவ்வளவு சிறப்பு வாய்ந்தவரின், சிறப்பு வாய்ந்த ஆண்டில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தாமல் அதிகாரிகள் அலட்சியமாக இருந்துள்ளனர். இங்கிலாந்தில் பிறந்து, தமிழகத்துக்கு வந்து, காங்கிரஸின் விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்று கைதான அன்னி பெசன்ட் அம்மையாரின் படத்துக்கும் மாலை அணிவிக்கவில்லை. இந்தியா குடியரசு நாடாக உருவாகக் காரணமாக இருந்தவர் டாக்டர் அம்பேத்கர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள அவரது சிலைக்கும் மாலை அணிவிக்காதது வருத்தம் அளிக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "இந்து தமிழ் திசை செய்தியால், சுதந்திர தினம், குடியரசு தினவிழா காலங்களில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சுதந்திரப் போராட்ட தலைவர்களின் சிலைகளுக்கு பாரபட்சமின்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. முதல்வரின் உத்தரவுப்படி அனைத்து சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு தொடர்புடைய துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஓரிரு இடங்களில் விடுபட்டிருக்கலாம். இனி வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நிகழாது" என்றனர். பின்னர் நேற்று மாலை அவசர அவசரமாக விடுபட்ட சிலைகளுக்கு அதிகாரிகள் மாலைகளை அணிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x