Published : 24 Jan 2022 02:26 PM
Last Updated : 24 Jan 2022 02:26 PM

அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம் | அரசியலாக்க வேண்டாம்; குழந்தையிடம் அவ்வாறு வீடியோ பதிவு செய்தது தவறு: அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: "அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும்" என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் கூறிய அவர், "சம்பந்தப்பட்ட பள்ளி கிறிஸ்தவ கல்வி நிறுவனமாக இருந்தாலும், இந்துக்கள்தான் அதிகமானோர் அங்கு படிக்கின்றனர். அங்கு படிக்கின்ற மாணவர்களிடம் நாங்கள் கருத்து கேட்டுள்ளோம். தற்போது படிக்கின்ற மாணவர்கள் மட்டுமின்றி, ஏற்கெனவே அந்தப் பள்ளியில் படித்துமுடித்து வெளியே சென்ற மாணவர்களிடமும் நாங்கள் கருத்து கேட்டுள்ளோம். இந்த விவரங்கள் அனைத்து காவல்துறை விசாரணையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கண்டிப்பாக தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும்.

தமிழகத்தில் பள்ளிகளில் இதற்குமுன் நடந்த சம்பவங்கள் எல்லாம் வேறுவிதமாக இருந்துள்ள நிலையில், இதுபோன்ற சம்பவம் புதிதாக வந்துள்ளது. இருப்பினும் இதுதொடர்பாக கல்வித் துறை அதிகாரிகளான CEO-க்கள் மூலம் கருத்துக்களைப் பெற்றுள்ளோம். வழக்கு நிலுவையில் இருப்பதால், அந்தக் கருத்துக்கள் அனைத்தும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையைப் பொறுத்து முடிவெடுக்கப்படும். அரசியல் ரீதியாக பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், காரணங்கள் எதுவாக இருந்தாலும் இழந்த அந்த உயிரை மீட்கமுடியாது. இதுபோன்ற சம்பவங்கள் நிகழக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது.

மரண வாக்குமூலத்தை அரசு துறையைச் சேர்ந்தவர்கள்தான் பதிவு செய்ய வேண்டும். அதையும்மீறி ஒரு சில அமைப்புகள் சென்று, அந்தக் குழந்தையைத் தூண்டும் விதமாக அப்படியிருக்குமா, இப்படியிருக்குமா என கேட்கின்றபோது, அந்தக் குழந்தை உறுதியாக எதையும் சொல்லாமல், இருக்கலாம் என்றே பதிலளித்துள்ளார். இதில் சோகமான விஷயமென்றால், சம்பந்தப்பட்ட குழந்தையின் பெற்றோரால் கல்விக்கட்டணம் கட்ட முடியாத சூழலில் கூட, தற்போது அரசு யார்மீது நடவடிக்கை எடுத்திருக்கிறதோ, அந்த வார்டன்தான் கல்விக்கட்டணம் கட்டி அந்தக் குழந்தையை படிக்க வைத்துள்ளார். ஆனாலும், குழந்தையின் மன உளைச்சலுக்கு காரணமாக இருந்ததால்தான் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, அமைப்புகள் இதை அரசியலாக்க வேண்டாம். குழந்தையிடம் அவ்வாறு வீடியோ பதிவு செய்தது தவறு. சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை காவல்துறை எடுத்துவருகிறது.

எனவே, அமைப்புகளிடம் நான் கேட்டுக் கொள்வது ஒன்றுதான். இந்த விவகாரம் குறித்து தீர விசாரிக்கப்படும்.விசாரணையின் உண்மைத்தன்மை எதுவாக இருந்தாலும், முதல்வர் பாகுபாடின்றி தவறு யார் செய்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பார். இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்கக்கூடாது என்ற நிலையில், காவல்துறை பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறது. பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் வேலை வாங்ககூடாது. ஒருவேளை ஆட்கள் பற்றாக்குறை இருந்தால் சம்பந்தப்பட்ட CEO-களிடம் தெரிவிக்க வேண்டும். 10 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக மே அல்லது மே மாத இறுதியில் பொதுத் தேர்வு நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.

நடந்தது என்ன? - முன்னதாக, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். பள்ளி அருகே தங்கியிருந்த அவர்,விடுதியில் உள்ள அறைகளை சுத்தம் செய்ய வார்டன் வற்புறுத்தியதாக கூறி, அண்மையில் விஷம் குடித்தார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, சிகிச்சை பலனின்றிகடந்த ஜன.19-ம் தேதி உயிரிழந்தார்.

தனது மகளின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை மகளின் உடலைப் பெற மாட்டோம் என்று மாணவியின் பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். மாணவியின் மரணத்துக்கு மத மாற கட்டாயப்படுத்தியதுதான் காரணம் என்றும் புகார் கூறினர். இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மாணவியின் தந்தை தாக்கல் செய்த மனுவில், ‘‘எனது மகளை கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி பள்ளி நிர்வாகத்தினர் கொடுத்த நிர்பந்தத்தால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார். எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்ற வேண்டும். விடுதி வார்டன் சகாயமேரி, நிர்வாகி ராக்லின்மேரி மற்றும் பள்ளித் தலைமையாசிரியர் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தார். இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி, ‘‘மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக் கொள்ள வேண்டும். தஞ்சாவூரில் உள்ள நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவர் முன்னிலையில் மாணவியின் பெற்றோர் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும். அதை மூடி சீலிடப்பட்ட உறையில் வைத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி நேற்று முன்தினம் மாணவியின் உடலை பெற்றுக்கொண்ட பெற்றோர், சொந்த ஊரில் தகனம் செய்தனர். இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தஞ்சாவூர் நீதித்துறை மூன்றாம் எண் நடுவர் பாரதி முன்னிலையில், மாணவியின் பெற்றோர் இருவரும் தனித்தனியாக ஆஜராகி தங்களின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். வாக்குமூலம் பெறும் நிகழ்ச்சி முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மாணவியின் பெற்றோரிடம் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலம் சீலிடப்பட்ட கவரில் வைத்து ஒப்படைக்கப்பட உள்ளது.

இதனிடையே, மாணவியை மதம் மாற கட்டாயப்படுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி, இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x