Published : 24 Jan 2022 07:53 AM
Last Updated : 24 Jan 2022 07:53 AM

திருச்சி அருகே நெடுங்கூரில் ஒரே இடத்தில் இறந்துகிடந்த 24 குரங்குகள்: தனிப்படை அமைத்து வனத் துறை விசாரணை

நெடுங்கூரில் இறந்துகிடந்த குரங்குகள்.

திருச்சி: திருச்சி அருகே நெடுங்கூரில் நேற்று ஒரே இடத்தில் 24 குரங்குகள் உயிரிழந்து கிடந்த விவகாரம் தொடர்பாக, தனிப்படை அமைத்து வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகேயுள்ள நெடுங்கூரில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் 18 ஆண் குரங்குகள், 6 பெண் குரங்குகள் என 24 குரங்குகள் ஒரே இடத்தில் இறந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்ட வன அலுவலர் கிரண், வனச் சரகர் வி.கோபிநாத் உள்ளிட்டோர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து 24 குரங்குகளின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

இதற்கிடையே, ஒரே இடத்தில் 24 குரங்குகள் தானாக உயிரிழக்க வாய்ப்பில்லை என்பதால், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு திருச்சி மாவட்ட வனத் துறையினருக்கு மண்டல தலைமை வனப் பாதுகாவலர் என்.சதீஷ் உத்தரவிட்டார். அதன்பேரில், வனச் சரகர் வி.கோபிநாத் தலைமையில் தனிப்படை அமைத்து, குரங்குகளின் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறும்போது, “நெடுங்கூர் வனப் பகுதியில் இறந்து கிடந்த குரங்குகள் இந்த வனத்தைச் சேர்ந்த குரங்குகளாக இருக்க வாய்ப்பில்லை. வெளியில் ஏதோ ஒரு இடத்தில் இவற்றைப் பிடித்துக் கொன்று, அவற்றை இங்கு கொண்டு வந்து போட்டுச் சென்றிருக்கலாம் எனத் தெரிய வருகிறது. இறந்து கிடந்த குரங்குகளின் மீது எந்த காயமும் இல்லை. முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் அவற்றின் உணவுப்பாதையில் விஷம் இருந்ததற்கான தடயமும் இல்லை. எனவே, மூச்சுத் திணறல் காரணமாக இவை இறந்திருக்கலாம் என கருதுகிறோம். தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.

ஒரே இடத்தில் 24 குரங்குகள் உயிரிழந்த நிகழ்வு, வனத் துறை மற்றும் வன ஆர்வலர்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x