Published : 23 Jan 2022 05:55 AM
Last Updated : 23 Jan 2022 05:55 AM

மின்தடை இல்லாத தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை: மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி

பொள்ளாச்சி

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சூரிய மின்உற்பத்தி பூங்காக்கள் அமைக்கப்பட்டு, மின் தடை இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு, கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 157 புதிய குடியிருப்புகள், 55 குக்கிராமங்கள் என 212 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.69.314 கோடி மதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

நெகமம் கப்பாளக்கரையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு, மின்மோட்டார்களை இயக்கி திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். அதன் பின்னர் அமைச்சர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில் முதல்வரின் அறிவுறுத்தல்படி மின் விநியோக கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 216 புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான இடங்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

73 துணை மின்நிலையங்களுக்கு மட்டும் இடம் தேர்வு செய்ய வேண்டிய பணிகள் நிலுவையில் உள்ளன. விரைவில் இந்தப் பணிகள் நிறைவுபெறும். அடுத்த ஆண்டு 95 துணை மின் நிலையங்கள் அமைக்க துறைரீதியாக ஆய்வு நடைபெற்று வருகிறது.

புதிய மின் இணைப்புகள் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு, 24 மணி நேரத்தில் மின்சார இணைப்பு வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கான, ஒரு லட்சம் இலவச மின்இணைப்பு வழங்கும் திட்டத்தில், இதுவரை 23 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். வரும் மார்ச் மாதம் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம் பூர்த்தி செய்யப்படும்.

மேலும் 4 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்திக்கான மின் உற்பத்தி பூங்கா அமைக்க அந்தந்த மாவட்டங்களில் இடத்தைத் தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தவுடன் அனைத்து மாவட்டங்களிலும் சூரிய மின்உற்பத்தி பூங்காக்கள் அமைக்கப்பட்டு, மின் தடை இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

அப்போது, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், சார்ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x