Published : 22 Jan 2022 12:57 PM
Last Updated : 22 Jan 2022 12:57 PM

'நமக்கு நாமே' திட்டத்தில் சென்னையில் 70 திட்டப்பணிகளுக்கு அனுமதி

சென்னை: சென்னையில் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் ரூ.9 கோடியே 31 லட்சத்தில் 70 திட்டப் பணிகளை மேற்கொள்ள அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நகர்ப்புற வளர்ச்சிக்காக “நமக்கு நாமே” திட்டம் அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, சாலைகள், தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.300 கோடி மதிப்பில்'நமக்கு நாமே' திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.

இத்திட்டத்தில் பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் உள்ளிட்டோர் ஒரு பங்கு நிதி அளித்தால், அரசின் சார்பில் கூடுதலாக இரு பங்கு நிதி வழங்கப்பட்டு, மக்கள் பரிந்துரைக்கும் சிறப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

மேலும், நீர்நிலைகள் புனரமைப்பு செய்தல் தொடர்பான பணிகளில் தூர்வாருதல் மற்றும் கரைகளை பலப்படுத்தும் பணிகளுக்கு திட்ட மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 50 சதவீத பங்களிப்பை பொதுமக்கள் அல்லது நிறுவனங்கள் வழங்க வேண்டும். இத்திட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்புக்கு அதிகப்பட்ச வரம்பு ஏதும் இல்லை.

இத்திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் இதர பிற தொழில் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, அதில் 70 திட்டப் பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசின் நிர்வாக அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ரூ.9 கோடியே 31 லட்சத்தில் 70 திட்ட பணிகளை மேற்கொள்ள அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. இதில், ரூ. 7 கோடியே 70 லட்சம் பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் பிற நிறுவனங்களின் பங்களிப்பாகவும், ரூ.1 கோடியே 61 லட்சம் அரசின் பங்களிப்பாகவும் வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x