Published : 20 Jan 2022 05:42 AM
Last Updated : 20 Jan 2022 05:42 AM

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரேகட்டமாக தேர்தலை நடத்த வேண்டும்: மாநில தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரேகட்டமாக நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்டுள் ளது. இதையடுத்து, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட காரணங்களால் இன்னும் தேர்தல் நடத்தப்பட வில்லை. இதனிடையே, புதிய மாநகராட்சிகள், நகராட்சிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர் தலை விரைவில் நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. வார்டுகள் மறுவரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகளும் முடிந்துள்ளன.

இந்நிலையில், நகர்ப்புற உள் ளாட்சித் தேர்தலை அமைதியாக நடத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டத்துக்கு மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி, சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் சுந்தர் எம்எல்ஏ, வழக்கறிஞர் கிரிராஜன் (திமுக), பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ, வழக்கறிஞர்கள் மனோஜ் பாண்டியன், பாபு முருகவேல் (அதிமுக), முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி, பாலாஜி (தேமுதிக), தாமோதரன், எஸ்.கே நவாஸ் (காங்கிரஸ்), கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் (பாஜக), மு.வீரபாண்டியன், ஏழுமலை (இந்திய கம்யூனிஸ்ட்), குணசேகரன், ஆறுமுகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ஹக் கிம்ஸ், மணிசங்கர் (திரிணமூல் காங்கிரஸ்), சத்தியமூர்த்தி, சார்லஸ் (பகுஜன் சமாஜ் கட்சி) மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி நிர் வாகிகள் பங்கேற்றனர்.

மேலும், மாநில தேர்தல் ஆணைய செயலர் எ.சுந்தரவல்லி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, பேரூராட்சிகள் ஆணையர் ஆர்.செல்வராஜ், நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, மாநகராட்சி துணை ஆணையர் விஷூ மகாஜன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

கட்சிப் பிரதிநிதிகளிடம் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கருத்துகளை கேட்டறிந்தார். அப் போது திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று ஆணையரிடம் வலியுறுத்தின.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள், பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

கிரிராஜன் (திமுக): அண்மையில் 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலை போலவே நேர்மையாக, வெளிப்படை தன்மை யுடன், ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையரிடம் வலியுறுத்தி உள்ளோம்.

பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக): துணை ராணுவப் படை பாதுகாப்புடன் ஒரேகட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலின்போது கரோனா தடுப்பு விதிகளை முறை யாக பின்பற்ற வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு 10 மணிக்கு மேல் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பிரச்சாரத்தை எப்படி மேற்கொள்வது, கூட்டங்கள் இரவு 10 மணிக்கு முடியும் நிலையில் தொண்டர்கள் எப்படி வீட்டுக்கு செல்வது என விளக்கம் கேட்டிருக்கிறோம். உரிய விளக்கம் அளிப்பதாக தேர்தல் ஆணையம் சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் தேர்தலை தள்ளிப் போடாமல், உச்ச நீதிமன்ற உத் தரவுப்படி விரைவாக நடத்த வேண் டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தி இருக்கிறோம்.

கரு.நாகராஜன் (பாஜக): நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரேகட்டமாக நடத்த வேண்டும். மத்திய பாதுகாப்புப் படையை தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும். தேர்தல் பணிகளுக்கு அனுமதி வழங்குவதில் ஒற்றைச் சாளர முறை பின்பற்றப்பட வேண்டும். அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். தேர்தல் அறிவித்த பிறகு, வேட்புமனு தாக்கல் செய்ய போதிய அவகாசம் வழங்க வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க தனி வாக்குச் சாவடி அமைக்க வேண்டும். மாலையில் ஒரு மணி நேரம் தனியாக அவர்களுக்கு ஒதுக்கக் கூடாது என வலியுறுத்தி இருக்கிறோம். அதிமுக கூட்டணியில்தான் பாஜக உள்ளது.

தாமோதரன் (காங்கிரஸ்): தேர் தலை ஒரேகட்டமாக நடத்த வேண்டும். கரோனா நோயாளிகள் வாக்களிக்க மாலை 5 மணி முதல் 6 மணி வரை நேரம் ஒதுக்க வேண்டும்.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): தமிழகம் முழுவதும் தேர்தலை ஒரேகட்டமாக நடத்த வேண்டும். கரோனா பரவல் தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றி தேர்தலை நடத்த வேண்டும்.

குணசேகரன் (மார்க்சிஸ்ட்): துணை ராணுவப் படை பாது காப்புடன் தேர்தலை வெளிப்படை யாக நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆட்சியர்களுடன் ஆலோசனை

இந்தக் கூட்டத்தை தொடர்ந்து தேர்தலை அமைதியாக நடத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை நடத்தினார். இந்தத் தேர்தலில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் மின் னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அதனால், வாக்குப்பதிவு இயந்திரங் களின் தயார்நிலை, பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிதல், வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்துதல் உள்ளிட்ட தேர்தல் ஏற்பாடுகள் குறித் தும், தேர்தலுக்கான தயார்நிலை குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

உயர் நீதிமன்றத்தில் முறையீடு அவசர வழக்காக நாளை விசாரணை

சென்னை: கரோனா 3-வது அலை உச்சத்தில் இருப்பதால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்று கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதை அவசர வழக்காக நாளை விசாரிக்கிறது உயர் நீதிமன்றம்.

இது தொடர்பாக, தமிழக அரசின் ஓய்வுபெற்ற மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எம்.நக்கீரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:

தற்போது கரோனா 3-வது அலை உச்சத்தில் உள்ளது. இச்சூழலில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது உகந்ததாக இருக்காது. சென்னையில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்கள் கடும் துயரத்தை சந்தித்து வருகின்றனர். கடந்த ஆண்டு டிச.30-ம் தேதி ஒரு சதவீதமாக இருந்த கரோனா தொற்று பரவல், ஜன.17-ம் தேதி 17 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜன. 17-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் தினமும் 25 ஆயிரம் பேருக்கு தொற்று பரவல் இருப்பதாக தெரியவந்துள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

எனவே, இந்த இக்கட்டான தருணத்தில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால், அது மக்கள் மத்தியில் மேலும் விபரீதத்தை ஏற்படுத்திவிடும். சென்னையில் மட்டுமே இன்னும் 31 சதவீதம் பேர் முழுமையாக கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. இதேபோல தமிழகத்தின் பிற பகுதிகளில் இன்னும் 40 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி போட வேண்டியுள்ளது. எனவே, தற்போதைய சூழலில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது. தேர்தலை தள்ளிவைக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரியிருந்தார். தலைமை நீதிபதி (பொறுப்பு) முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையீடு செய்தார். அப்போது, ‘‘கரோனா பரவல் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் சூழலில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் கரோனா பரவலின் தீவிரம் பன்மடங்காக அதிகரித்துவிடும். எனவே, தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும். இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்’’ என்று கோரினார்.

இதை ஏற்ற நீதிபதிகள், மனுவை ஜன.21-ம் தேதி (நாளை) விசாரிப்பதாக தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x