Published : 20 Jan 2022 07:50 AM
Last Updated : 20 Jan 2022 07:50 AM

தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள், குடும்பத்தினர் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்: பொது சுகாதாரத் துறை இயக்குநர் உத்தரவு

சென்னை: தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர் 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கு அவர் அனுப்பிஉள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கரோனா தொற்றின்3-வது அலை ஜனவரி மாதத்தில் தொடங்கியிருக்கிறது. இதையடுத்து பொது இடங்களிலும், குறிப்பாக தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலும் அதிக அளவில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அங்கு தீவிரமாக கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து நிறுவனங்களிலும் ஊழியர்களின் உடல் நிலையைக் கண்காணிக்க வேண்டும். ஊழியர்களுக்கோ அல்லது அவர்களது குடும்பத்தினருக்கோ காய்ச்சல், சளி, உடல்வலி, தொண்டை வலி போன்ற கரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்களைத் தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பணிக்கு வரும் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்க வேண்டும். 99 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவானால், அவர்களை தனிமைப்படுத்தி கரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

மூக்கு, வாய் ஆகியவற்றை முழுமையாக மூடியபடி ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதனைக் கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமிக்கவோ அல்லது சிசிடிவி கேமரா மூலம்ஆய்வு செய்யவோ தொழில் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களை பணியிடங்களில் இருந்து வெளியேற்ற உத்தரவிட வேண்டும்.

பணியிட வளாகத்துக்குள் தனி நபர் இடைவெளி கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல், கை கழுவுவதற்கான வசதிகள், சானிடைசர் வசதிகளை ஊழியர்களுக்கு நிறுவனங்கள் ஏற்படுத்தித் தர வேண்டும். அலுவலக உணவு விடுதிகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே அமர்ந்து உணவருந்த வேண்டும்.

தொழில் நிறுவனங்களின் குடியிருப்புகள், போக்குவரத்து சேவைகளின்போது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் இரு தவணைகளும் கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்தல் அவசியம்.

300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் நோய்த் தடுப்பு விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனமே சுகாதார ஆய்வு அதிகாரிகளை பணியமர்த்தலாம். கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் இணையவழியே பயிற்சிகளை வழங்கவும் நிறுவனங்கள் முன்வரவேண்டும்.

இந்த வழிகாட்டுதல்களை அனைத்து தொழில் நிறுவனங்களும் பின்பற்றுகின்றனவா என்பதை மாவட்ட துணை சுகாதார இயக்குநர்கள் ஆய்வு செய்ய வேண்டும். விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x